search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டு சக்கரக்குப்பம் கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட தொட்டி
    X
    மேட்டு சக்கரக்குப்பம் கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட தொட்டி

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு அடுத்த வாரம் தண்ணீர் கிடைக்கும்

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீரை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

    சென்னை:

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடும், தண்ணீர் பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது.

    ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நடத்தி வருபவர்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு திணறி வருகிறார்கள்.

    அதே நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களும் தண்ணீர் பிரச்சினையால் தவித்து வருகிறார்கள். இதனை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    விவசாய கிணறுகள், கல்குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தண்ணீரை எடுத்து பொதுமக்களின் தண்ணீர் தேவையை தமிழக அரசு ஓரளவுக்கு பூர்த்தி செய்து வருகிறது. இருப்பினும் தண்ணீரின் தேவை இன்னும் அதிகமாகவே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில்கள் மூலமாக தண்ணீரை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருந்தார்.


    இந்த திட்டத்துக்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.65 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீரை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

    இது தொடர்பாக சென்னையில் இருந்து சென்ற அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் ஆய்வு நடத்தி உள்ளனர். குடிநீர் வடிகால் வாரியம், தெற்கு ரெயில்வே அதிகாரிகள் ஒன்றாக சென்று ரெயிலில் தண்ணீரை கொண்டு வருவது எப்படி? என்பது பற்றி ஆலோசித்தனர். ஜோலார்பேட்டை மேட்டு சக்கரக்குப்பத்தில் உள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தரைமட்ட நீர்த் தேக்க தொட்டி, பார்சம் பேட்டை மற்றும் கேதாண்டப்பட்டி ரெயில்வே கேட் அருகில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளை 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    மேட்டு சக்கரக்குப்பத்தில் இருந்து புதிய குழாய்களை இணைத்து, காவிரி கூட்டுக் குடிநீரை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வருவது குறித்தும், அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த பணிகளை துரிதமாக செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த பணிகள் நிறைவடைந்ததும் சென்னைக்கு ரெயில்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சென்னைக்கு ரெயில்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பரிந்துரையின் பேரில், ரெயில்வே நிர்வாகம் குடிநீர் எடுத்து செல்ல இதுவரை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

    ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல முடியும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ரெயில்வே நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அதற்கான ஒப்புதல் இன்னும் 3 நாட்களில் கிடைத்து விடும் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சென்னையில் நேற்று நடை பெற்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் (1 கோடி லிட்டர்) தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ரெயிலில் 50 வேகன்களில் தண்ணீர் நிரப்பி கொண்டு வரப்படும். ஒரு முறை 25 லட்சம் லிட்டர் தண்ணீரை கொண்டு வர முடியும். தினமும் இதேபோன்று 4 முறை தண்ணீர் கொண்டு வரப்படும்.

    ரெயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள ரூ.65 கோடி போதுமானதாக இல்லை என்றும், இதற்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தவுடன் பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த வாரத்தில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.

    இதற்கான பணிகள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம், மேட்டு சக்கரக் குப்பம் கூட்டு குடிநீர் தரைமட்ட தொடடி (பம்பிங் நிலையம்), பார்சம்பேட்டை ரெயில் நிலையம், ஆகிய 3 இடங்களில் நாளை அல்லது நாளை மறுதினம் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×