search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிந்தாதிரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்குபவர்களை படத்தில் காணலாம்.
    X
    சிந்தாதிரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்குபவர்களை படத்தில் காணலாம்.

    தடைக்காலத்துக்கு பின்னர் வரத்து அதிகரிப்பு: மீன்களின் விலை சரி பாதியாக குறைந்தது

    தடைக்காலத்துக்கு பின்னர் வரத்து அதிகரித்திருப்பதால் மீன்களின் விலை சரி பாதியாக குறைந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சென்னை :

    மீன்களின் இனவிருத்தியை பெருக்குவதற்காக ஆண்டுதோறும் 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தை மத்திய-மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதன்படி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் கடந்த 15-ந் தேதி வரையிலும் தடைக்காலம் இருந்தது.

    மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து கடந்த 15-ந் தேதி நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிப்பதற்காக சென்றனர். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருவதால் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீன்களின் விலையும் குறையத்தொடங்கி உள்ளது.

    மீன்பிடி தடைக்காலத்தின்போது ஆந்திரா, கேரளாவில் இருந்து மீன்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது இருந்த விலையோடு ஒப்பிடுகையில் சரி பாதி அளவுக்கு விலை குறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மீன் வியாபாரி சத்யா கூறும்போது, ‘சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீன்கள் வரத்தொடங்கியுள்ளதால் மீன்களின் விலை 50 சதவீதம் குறைந்துள்ளது. பல்வேறு வகையான மீன்களும் வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர்’ என்றார்.

    சிந்தாதிரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி மீன்களின் விலை கிலோவில் (ஒரு கிலோ) (கடந்த வார விலை அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது) வருமாறு:-

    வஞ்சிரம் நடுத்தர ரகம்- ரூ.400 (ரூ.800), இறால்-ரூ.200 முதல் ரூ.500 (ரூ.300 முதல் ரூ.600), வவ்வால்-ரூ.400 முதல் ரூ.500 (ரூ.1,000), வாளை-ரூ.80 (ரூ.130 முதல் ரூ.150), நெத்திலி (பெரியது)-ரூ.120 முதல் ரூ.150 (ரூ.300), சங்கரா-ரூ.130 (ரூ.200 முதல் ரூ.300), பாறை-ரூ.150 (ரூ.300), அய்லா-ரூ.100 (ரூ.250), சுறா-ரூ.200 (ரூ.450), கொடுவா ரூ.300-(ரூ.500), சீலா-ரூ.250 (ரூ.400), கவளை-ரூ.80 (ரூ.150), பண்ணா-ரூ.150 (ரூ.350), திருக்கை-ரூ.150 (350), காலா-ரூ.200 (ரூ.500), நண்டு-ரூ.100 (ரூ.350)-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    Next Story
    ×