search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெருமுனையில் மர்ம லாரி நின்ற விவகாரம்- குஷ்புவின் டுவிட்டர் புகார் மீது காவல்துறை நடவடிக்கை
    X

    தெருமுனையில் மர்ம லாரி நின்ற விவகாரம்- குஷ்புவின் டுவிட்டர் புகார் மீது காவல்துறை நடவடிக்கை

    தெருமுனையில் மர்ம லாரி நின்ற விவகாரம் தொடர்பாக குஷ்புவின் டுவிட்டர் புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    சென்னை:

    நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் வீடு சென்னை சாந்தோம் பகுதியில் இருக்கிறது.

    குஷ்பு வீட்டு அருகே தெருமுனையில் பதிவெண் பலகை இல்லாத மர்மமான ஒரு கண்டெய்னர் லாரி 10 நாட்களாக நின்றது. நேற்று முன் தினம் அந்த லாரியை குஷ்பு படம் பிடித்து தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார். அவர் வெளியிட்டு இருந்த பதிவில் கூறியிருந்ததாவது:-

    எனது வீட்டுக்கு செல்லும் தெரு முனையில் நம்பர் பிளேட் இல்லாத கண்டெய்னர் லாரி 10 நாட்களாக நின்று கொண்டு இருக்கிறது. ஆனால் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. அதை பரிசோதிக்க வேண்டும். அல்லது புகார் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட யாருக்கும் இல்லை. நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பதால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சென்னை போலீசார் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

    இதற்கு டுவிட்டரில் பதில் கருத்து தெரிவித்த பலரும் நீங்கள் ஏன் போலீசில் புகார் செய்யக்கூடாது என்று கேட்டு இருந்தனர். சிலர் கேலி செய்தும் கருத்து வெளியிட்டு இருந்தனர். அதற்கு குஷ்பு பதில் அளித்து வெளியிட்ட பதிவில், ‘அந்த லாரி எனது தெருவில் நிற்கவில்லை. அப்படி இருந்தால் நான் புகார் செய்து இருப்பேன். யாராவது உதவ முடிந்தால் செய்யுங்கள். கேலி செய்ய வேண்டாம். வாய் மூடி நடையை கட்டுங்கள்’ என்று கூறி இருந்தார்.

    இது சம்பந்தமாக டுவிட்டரில் தொடர்ந்து வாக்குவாதங்கள் நடந்தன. நேற்று இது போலீஸ் கவனத்துக்கு சென்றது. அவர்கள் குஷ்புவிடம் எந்த தெரு? என்று விபரமாக கேட்டார்கள். அது பற்றிய தகவலை போலீசுக்கு குஷ்பு அளித்தார்.

    குஷ்புவின் புகாரை தொடர்ந்து டிராபிக் போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினார்கள். விசாரணை நடந்து வருகிறது. குஷ்புவிடம் சென்னை குடிமக்களுக்கான சேவை செயலியை டவுன்லோட் செய்து இனி புகார்களை அங்கு அளிக்கலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதுபற்றி குஷ்பு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘போலீசாரின் உடனடி நடவடிக்கையை பாராட்டுகிறேன். அந்த லாரி என் தெரு முனையில் தான் நின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் உங்களால் கண்ணை மூடிக்கொண்டு செல்ல முடியாது’.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    சென்னை டிராபிக் போலீசுக்கு 2017-ம் ஆண்டு டுவிட்டரில் கணக்கு தொடங்கப்பட்டது. சமீபகாலமாக இந்த கணக்கு மூலம் வரும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களில் 500 புகார்களுக்கு மேல் வந்துள்ளன.

    பார்க்கிங் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது தொடர்பான புகார்கள் அதிகமாக வந்துள்ளன. அவற்றை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆராய்ந்து உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×