search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ படிப்புகளில் சேர 59 ஆயிரம் பேர் ஆர்வம்
    X

    மருத்துவ படிப்புகளில் சேர 59 ஆயிரம் பேர் ஆர்வம்

    மருத்துவ படிப்புகளில் சேர 59 ஆயிரத்து 756 பேர் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதுவரை 53 ஆயிரத்து 176 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை :

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற சுமார் 3 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ படிப்புகளில் சேர, 7-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நேற்று முன்தினம் ஆகும். ஆன்லைனில் 68 ஆயிரத்து 20 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 39 ஆயிரத்து 13 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29 ஆயிரத்து 7 பேரும் விண்ணப்பித்தனர்.

    எனினும் அதில், 59 ஆயிரத்து 756 பேர் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தனர். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை இணைத்து தபால் மூலமாகவோ, நேரடியாகவோ சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள் ஆகும்.

    மருத்துவ படிப்புகளில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவி ஒருவர் சமர்ப்பித்த காட்சி.

    நேற்று மாலை 5 மணியுடன் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்த நிலையில், காலையில் இருந்தே சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்ககத்தின் அலுவலகத்தில் மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.

    நேற்றைய நிலவரப்படி 53 ஆயிரத்து 176 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்து உள்ளன. நேற்று தபால் மூலமாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் இன்று (சனிக்கிழமை) வந்து சேர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    பூர்த்தி செய்து அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து, தகுதியானவர்களுக்கு தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் வெளியாகும் தினத்தன்று, என்னென்ன தேதியில் கலந்தாய்வு நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகும்.
    Next Story
    ×