search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவன் திடீர் மரணம்
    X

    ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவன் திடீர் மரணம்

    ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவன் திடீரென உயிரிழந்தார். டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

    ஆரணி:

    ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் நெசவு தொழிலாளி. இவரது மனைவி பேரரசு இவர்களுக்கு ஹரி (வயது 16). விக்னேஷ் (12). என இரண்டு மகன்கள் இருந்தனர். ஹரி ஆரணி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். விக்கேனஷ் (7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ஹரி நேற்று பள்ளிக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இது குறித்து தனது நண்பனிடம் கூறியுள்ளார். அவர் மாத்திரை ஒன்று கொடுத்து இதை சாப்பிடு வயிற்றுவலி சரியாகிவிடும் என கூறியுள்ளார்.

    ஹரி அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டார். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டிற்கு வந்ததும் வயிற்றுவலி மேலும் அதிகமாகி வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் தவித்தார்.

    அவரது பெற்றோர் ஹரியை ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். அப்போது ஹரி ரத்த வாந்தி எடுத்தார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

    அதற்கு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஒன்றும் பயப்பட தேவையில்லை சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

    தொடர்ந்து வயிற்று வலியால் துடித்த ஹரி இன்று காலை திடீரென இறந்தான். இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    ஹரியின் சாவிற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் முறையாக சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்தனர். சம்பந்தபட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

    ஆரணி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×