search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டையில் வீட்டுமனை கேட்டு பீடி தொழிலாளர்கள் போராட்டம்
    X

    ஊத்துக்கோட்டையில் வீட்டுமனை கேட்டு பீடி தொழிலாளர்கள் போராட்டம்

    ஊத்துக்கோட்டையில் வீட்டுமனை வழங்கக் கோரி பீடி தொழிலாளர்கள தாலுக்கா அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாட்டத்தில் சுமார் ஆயிரம் பீடித்தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் ஆங்காங்கே குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி ஊத்துக்கோட்டை தாலூக்கா அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருபுரம் பகுதியில் வீட்டு மனைகள் ஒதுக்கக்கோரி திருவள்ளூர் மற்றும் ஊத்துக் கோட்டை தாலுக்கா அலுவலங்களில் கடந்த வருடம் கோரிக்கை வைத்தனர்.

    பீடி தொழிலாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்க தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கடந்த வருடம் மே 5-ந் தேதி நடைபெற்ற மெய்யூர் சிறப்பு கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் திருவள்ளூர் தாசில்தாரும் ஊத்துக்கோட்டை தாசில்தாருக்கு சில நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தில், பீடி தொழிலாளர்களுக்கு ஒதுக்க திருவள்ளூர் தாலுக்காவில் இடம் இல்லை.

    எனவே மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருபுரம் பகுதியில் உள்ள ஆதிதிரா விட நத்தம் புறம்போக்கு இடத்தை ஒதுக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    எனினும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலக அதிகாரிகள் வீட்டு மனை ஒதுக்க எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதை கண்டித்தும், உடனே வீட்டுமனைகள் வழங்கக் கோரியும் பீடித் தொழிலாளர்கள் சுமார் 200 பேர் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த தர்ணா போராட்டத்துக்கு பீடித் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். தலைவர் பலராமன், இந்திய வாலிப ஜனநாயக சங்கத்தை சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் வந்திருந்த சப்- கலெக்டர் பெருமாளிடம் கோரிக்கை மனு அளித்தனர். வீட்டுமனை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததின் பேரில் பீடித் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×