search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெயிலின் தாக்கம் குறைகிறது - வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
    X

    வெயிலின் தாக்கம் குறைகிறது - வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக்கடலில் உருவாகி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் ஏப்ரல், மே மாதங்களில் வாட்டி எடுக்கும் வெயில் ஜூன் மாத தொடக்கத்தில் படிப்படியாக குறையும். ஆனால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அது போன்று குறையாமல் அதிகரித்து காணப்பட்டது.

    கடந்த 10 நாட்களாக அக்னி வெயிலையும் மிஞ்சும் வகையில் அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மதிய வேளைகளில், பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வெயில் அதிகமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.

    இன்று காலையில் சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தை காண முடியவில்லை. இதமான வெப்ப நிலையுடன் குளிர்ந்த காற்று வீசியது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் படிப்படியாக குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



    வங்கக் கடலின் வடக்கு பகுதியில் அடுத்த 2 முதல் 3 நாட்களில் விசாகப்பட்டினம் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், மத்திய அரபிக்கடலில் பல பகுதிகளில் அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய சாதகமான சூழல் உள்ளது என்றும், இதேபோல தென் அரபிக்கடல் பகுதியில் பருவ மழை மிதமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மூலம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். இதன் மூலம் சென்னையில் நிலவி வரும் வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ‘வாயு’ புயல் காரணமாக தென்மேற்கு பருவமழையின் ஈரக்காற்று உறிஞ்சப்பட்டதால் மழை ஓய்ந்தது. இதன் பிறகு ‘வாயு’ புயல் குஜராத்தில் கரையை கடந்து வலுவிழந்துவிட்டது.

    இதனால் தென்மேற்கு பருவமழையும் மீண்டும் வலுப்பெற தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கேரளா, தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதன் தாக்கத்தாலும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் சில நாட்களில் தற்போது நிலவி வரும் சுட்டெரிக்கும் வெயில் படிப்படியாக குறையும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

    கேரளாவை பொறுத்தவரை இன்று முதல் மழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்று கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும், நாளை இடுக்கி, திருச்சூர், மலப்புரம், திருவனந்தபுரம் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×