search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூலி உயர்வை வழங்க வேண்டும் - நெசவாளர்கள் போராட்டம்
    X

    8 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூலி உயர்வை வழங்க வேண்டும் - நெசவாளர்கள் போராட்டம்

    ராஜபாளையம் அருகே சேத்தூரில், பெண்கள் உள்பட 150 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே சேத்தூர், முகவூர், முத்துசாமிபுரம், புனல் வேலி, தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    நெசவாளர்களின் தரத்தை உயர்த்தும் வகையிலும், உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும் கைத்தறி மாற்றப்பட்டு அரசு சார்பில், அனைவருக்கும் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பெடல் தறி வழங்கப்பட்டது. ஆனால் தறிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உற்பத்தி பொருட்கள் வழங்கப்படவில்லை.

    மேலும் பெடல் தறி திட்டத்திற்கு மாற்றப்பட்டதில் இருந்து இதுவரை, கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் நாள் ஒன்றுக்கு ரூ. 150 மட்டுமே வருமானம் என்ற நிலையில் நெசவாளர்களின் வாழ்க்கை நகர்கிறது.

    கைத்தறிக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி மற்றும் ரிபேட் போன்ற முறைகளும் நிறுத்தப்பட்டதால் நெசவாளர்களின் வருமானம் தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

    மேலும் உற்பத்திக்கு தேவையான பாவு நூல் மற்றும் ஊடை நூலும் முறையாக வழங்கப்படுவதில்லை. குறைந்த அளவு வருமானத்தினால், மருத்துவ செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டை சீரமைத்தல் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை செலவுகள் கூட செய்ய முடியாத அவல நிலையில் நெசவாளர்கள் உள்ளனர்.

    எனவே கடந்த 8 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ள கூலி உயர்வை வழங்க வேண்டும், ஆண்டு முழுவதும் வேலை, முதியோர் உதவி தொகை ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெசவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேத்தூர் பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×