search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கிய பைல்கள் தேக்கம் - மதுரைக்கு புதிய கலெக்டர் நியமனம் எப்போது?
    X

    முக்கிய பைல்கள் தேக்கம் - மதுரைக்கு புதிய கலெக்டர் நியமனம் எப்போது?

    மதுரைக்கு புதிய கலெக்டர் நியமிக்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் முக்கிய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    மதுரை:

    கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை கலெக்டர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து புதிய கலெக்டராக நாகராஜன் நியமிக்கப்பட்டார். ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதும் நிர்வாகப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட நாகராஜன் கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சுமார் 1,500 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்பினார். எந்தவித சிபாரிசுகளையும் ஏற்காமல் தகுதியின் அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்பட்டதால் சில மணி நேரத்தில் கலெக்டர் நாகராஜன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பொறுப்பு கலெக்டராக சாந்தகுமார் நியமிக்கப்பட்டார். இவர் கலால்துறை அதிகாரியாக பணி புரிந்தவர். ஏற்கனவே கூடுதல் பொறுப்பாக மாவட்ட வருவாய் அலுவலராகவும் இருந்து வருகிறார்.

    கலெக்டர் பொறுப்பும் வழங்கப்பட்டதால் பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

    பொறுப்பு கலெக்டர் என்பதால் முக்கிய கோப்புகளில் அவர் முடிவு எடுக்க முடியாது. எனவே கோப்புகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சட்டம், ஒழுங்கு பிரச்சினை, குடிநீர் பிரச்சினை மற்றும் பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதில் கலெக்டரின் பங்கு முக்கியம் என்பதால் புதிய கலெக்டர் எப்போது நியமிக்கப்படுவார்? என்று மதுரை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 16 நாட்களாக புதிய கலெக்டர் நியமிக்கப்படாததால் பல்வேறு பணிகளும் முடங்கியுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் மதுரைக்கு புதிய கலெக்டர் நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஏற்கனவே மதுரையில் பணியாற்றிய கலெக்டர்கள், மாநகராட்சி கமி‌ஷனர்கள் மதுரைக்கு கலெக்டராக வர முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

    தினமும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு காண வருகிறார்கள். முக்கிய மாவட்டமான மதுரையில் கலெக்டர் நியமிக்கப்படாதது அரசு பணியில் பெரும் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி மதுரைக்கு கலெக்டரை விரைவாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×