search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி வழக்கு
    X

    உள்ளாட்சி தேர்தல் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி வழக்கு

    உள்ளாட்சி தேர்தல் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் கமி‌ஷன் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக தேர்தல் ஆணையம் பஞ்சாயத்து நகராட்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தயார் செய்யப்படுகிறது.

    உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வழிவகை இல்லை. அதே சமயம் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் வெளியிடுகிறது.

    அதேபோல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலையும் இணைய தளத்தில் வெளியிட்டால் வாக்காளர்களுக்கு உதவியாக இருக்கும்.

    தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர் குறித்தும் வாக்காளர்கள் அறிந்து கொள்வது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்வது போல் தமிழக தேர்தல் ஆணையம் செய்வதில்லை.

    கடந்த தேர்தலுக்கான கணக்கினை முறையாக அளிக்காதவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் விபரங்கள் வாக்காளர்களுக்கு தெரிவதில்லை.


    ஆகவே வரும் உள்ளாட்சித் தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விபரங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பதிவேற்றம் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×