search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் நாசவேலைக்கு சதியா?- புழல் ஜெயிலில் 3 பயங்கரவாதிகளிடம் விசாரணை
    X

    தமிழகத்தில் நாசவேலைக்கு சதியா?- புழல் ஜெயிலில் 3 பயங்கரவாதிகளிடம் விசாரணை

    தமிழகத்தில் நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், புழல் ஜெயிலில் உள்ள 3 பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 258 பேர் உயிரிழந்தனர்.

    உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் இலங்கையை உலுக்கியது.

    தேசிய தவ்ஹீத் ஜமாத் என்கிற அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ள இந்த இயக்கத்தின் பின்னணியில் செயல்பட்ட தற்கொலை படை பயங்கரவாதிகளே இலங்கையில் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

    தற்கொலை படையினரின் தலைவனாக செயல்பட்ட ஜக்ரன் பின் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் வேட்டையாடி வருகிறார்கள்.

    இலங்கையில் மிகப்பெரிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவு அமைப்பினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனை இலங்கை அரசு கண்டுகொள்ளாமல் விட்டதே அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது. இலங்கையை போன்று இந்தியாவிலும் தற்கொலை படை தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

    தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலையை அரங்கேற்றவே பயங்கரவாதிகள் திட்டம் போட்டதாகவும், அது சரியாக கை கூடாத காரணத்தினாலேயே தங்களது தாக்குதல் திட்டத்தை பயங்கரவாதிகள் இலங்கையில் அரங்கேற்றியதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற சில தினங்களிலேயே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் அதிரடி சோதனையை தொடங்கினர். அதுபோல கேரளாவிலும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது இலங்கை குண்டு வெடிப்பில் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்புகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

    இதன் அடிப்படையிலேயே சில நாட்களுக்கு முன்னர் பூந்தமல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த தானுகா ரோ‌ஷன் உள்பட 3 பேர் பிடிபட்டனர்.

    தானுகா ரோ‌ஷன் இலங்கையில் இருந்து கள்ளத் தோணியில் தமிழகத்துக்கு வந்தது தெரிய வந்தது. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களால் தானுகா ரோ‌ஷன் ஈர்க்கப்பட்டவர் என்கிற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

     


    இதனை தொடர்ந்து 2 மாதங்களாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் சந்தேக நபர்களை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே கோவையில் முகாமிட்டு தொடர் சோதனையிலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சென்னையில் மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கடந்த முறை பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்திய அவர்கள் நேற்று புழல் சிறையில் சோதனை மேற்கொண்டனர்.

    புழல் சிறையில் உயர்மட்ட பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

    தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அத்வானியை கொலை செய்வதற்கு மதுரை திருமங்கலத்தில் பாலத்துக்கு அடியில் சக்தி வாய்ந்த குண்டை வைத்து நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டிய வழக்கில் போலீஸ் பக்ருதீனுக்கு தொடர்பு உள்ளது. இந்த குண்டை முன் கூட்டியே கண்டுபிடித்து செயல் இழக்க செய்ததால் அத்வானி அப்போது உயிர் தப்பினார்.

    இதன் பின்னர் தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்து இயக்க பிரமுகர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்குகளில் போலீஸ் பக்ருதீனுக்கும், அவனது கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. இந்த வழக்குகளிலும் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கடந்த 7 ஆண்டுகளாக 3 பேரும் சிறையில் உள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

    இதனை தொடர்ந்தே 3 பயங்கரவாதிகளிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேருக்கும் தொடர்பு உள்ளதா? என்கிற சந்தேகத்தின் பேரிலேயே அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.

    இவர்கள் அளித்த தகவலின் பேரில் அடுத்த கட்ட விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் இதற்கு முன்பு ஈடுபட்டவர்கள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி வருகிறார்களா? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    Next Story
    ×