search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு - ஊட்டியில் இருசக்கர வாகன பேரணி
    X

    ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு - ஊட்டியில் இருசக்கர வாகன பேரணி

    ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊட்டியில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
    ஊட்டி:

    தமிழகத்தில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதேபோல மறுபுறம் வாகன விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதே உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகனங்களை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பியது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதுடன், அவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி ஊட்டியில் நேற்று நடைபெற்றது.

    பேரணியை நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டி, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுரை கூறினர். பேரணி ஊட்டி ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து தொடங்கி லோயர் பஜார், மாரியம்மன் கோவில் சந்திப்பு, புளுமவுண்டன் சாலை, கமர்சியல் சாலை, வென்லாக் சாலை வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்றது.

    பேரணியில் போலீசாரும் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்றனர். தலைக்கவசம் உயிர்க்கவசம், இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், மலைப்பாதைகளில் 2-வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, 30 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், மலைப்பாதையில் மேல்நோக்கி வரும் வாகனங்களுக்கு வழி விட வேண்டும், சாலை சந்திப்புகளில் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும், சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை, போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சதாசிவம், முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×