search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிப்மரில் டாக்டர்கள் ‘ஸ்டிரைக்’ - புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது
    X

    ஜிப்மரில் டாக்டர்கள் ‘ஸ்டிரைக்’ - புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது

    புதுவை கோரிமேட்டில் இயங்கும் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் ‘ஸ்டிரைக்கில்’ ஈடுபட்டனர். இதனால் ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பிரிவு செயல்படவில்லை.
    புதுச்சேரி:

    மேற்கு வங்க மாநிலத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றிய பயிற்சி டாக்டர்களை நோயாளிகளின் உறவினர்கள் தாக்கினார்கள்.

    டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் கடந்த 11-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்க டாக்டர்களுக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் கடந்த 14-ந் தேதி முதல் 3 நாட்கள் போராட்டம் நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை டாக்டர்கள் பணியை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.

    இதற்கிடையே முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களை அழைத்து பேசினர். நோயாளிகளை பாதிக்கும் வகையில் ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டாம் என டாக்டர்களை கேட்டுக்கொண்டனர்.

    அதனை ஏற்று புதுவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடவில்லை. அதே வேளையில் அரசு ஆஸ்பத்திரிகள் முன்பு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் டாக்டர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். அதன் பின்னர் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து சிகிச்சை பிரிவுகளும் வழக்கம் போல் இயங்கின.

    அதே வேளையில் புதுவை கோரிமேட்டில் இயங்கும் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் ‘ஸ்டிரைக்கில்’ ஈடுபட்டனர். இதனால் ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பிரிவு செயல்படவில்லை.

    ஜிப்மரை பொறுத்தவரை புதுவை மட்டுமல்லாது தமிழகத்தின் அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெற நாள்தோறும் ஆயிரக்கணக்காக நோயாளிகள் வருவார்கள்.

    வழக்கம் போல் இன்றும், ஜிப்மர் மருத்துவமனைக்கு வெளிப்புற சிகிச்சை பெற நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் டாக்டர்கள் ஸ்டிரைக்கால் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    மேலும், அறுவை சிகிச்சை மற்றும் பரிசோதனை கூடங்களிலும் டாக்டர்கள் பணியில் இல்லை. இதனால், இன்று பல்வேறு பரிசோதனைகளுக்காக வந்திருந்த நோயாளிகளும் பரிசோதனை செய்ய முடியவில்லை.

    இன்று நடைபெறுவதாக இருந்த அறுவை சிகிச்சைகள் மற்றொரு நாளில் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவசர கால சிகிச்சை பிரிவில் மட்டும் டாக்டர்கள் பணிபுரிந்தனர்.

    டாக்டர்கள் போராட்டத்தையொட்டி புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×