search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
    X

    அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    கோடை காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக அருப்புக்கோட்டை பகுதியில் குடிநீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. நகராட்சி பகுதியில் 5 அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பெண்கள் கடும் அவதியடைந்தனர்.

    ஒரு குடம் தண்ணீர் ரூ.10 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நகராட்சிக்குட்பட்ட (புளியம்பட்டி, திருநகரம்) 23, 26. 27-வது வார்டுகளில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனை கண்டித்தும், குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரியும் இன்று காலை 3 வார்டுகளை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அருப்புக்கோட்டை- விருதுநகர் ரோட்டில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. வெங்கடேசன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், உதவி பொறியாளர் காளீஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று பிற்பகலுக்குள் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
    Next Story
    ×