search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருடனுக்கு பயந்து மறைத்து வைத்திருந்த ரூ.11.5 லட்சம்- பழைய துணி மூட்டையுடன் பறிப்போனது
    X

    திருடனுக்கு பயந்து மறைத்து வைத்திருந்த ரூ.11.5 லட்சம்- பழைய துணி மூட்டையுடன் பறிப்போனது

    சென்னை தேனாம்பேட்டையில் பழைய துணிகளில் மறைத்து வைத்திருந்த ரூ.11.5 லட்சம் பறிப்போய் மீண்டும் திரும்ப கிடைத்த சம்பவம் உரிமையாளருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    தேனாம்பேட்டை கார்ப்பரே‌ஷன் காலனியை சேர்ந்தவர் சுசிலா. இவர் சொந்தமாக வீடு வாங்குவதற்காக ரூ.11½ லட்சம் பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.

    திருடனுக்கு பயந்து இந்த பணத்தை சுசிலா துணி மூட்டைக்குள் மறைத்து வைத்திருந்தார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பழைய துணிகளை வாங்கும் பெண் ஒருவர் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த சுசிலாவின் மகன் கணேசன் பணம் இருப்பது தெரியாமல் துணி மூட்டையை தூக்கி அந்த பெண்ணிடம் போட்டு விட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த சுசிலா துணி மூட்டையை காணாமல் திடுக்கிட்டார். இதுபற்றி மகனிடம் கேட்டபோது, பழைய துணி வாங்க வந்த பெண்ணிடம் மூட்டையை போட்டு விட்டதாக தெரிவித்தார்.

    உடனடியாக இதுபற்றி தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் பழைய துணியை வாங்கிச் சென்ற பெண் ஆட்டோவில் ஏறிச் செல்வது தெரியவந்தது. ஆட்டோ நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். இதில் சுசிலா வீட்டில் இருந்து செங்குன்றத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணே பழைய துணிகளை வாங்கிச் சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.



    அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் ஏழைகளுக்கு பழைய துணிகளை வாங்குவதாக அப்பெண் கூறியுள்ளார். இதனை நம்பியே சுசிலாவின் மகன் கணேசன் துணி மூட்டையை தூக்கி போட்டுள்ளார். அதில் இருந்த பணத்தை ஆட்டோவில் வைத்தே மகாலட்சுமி பார்த்துள்ளார். ஆனால் அதனை திருப்பிக் கொடுக்காமல் அவர் அபேஸ் செய்து எடுத்துச் சென்று விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மகாலட்சுமியிடமிருந்து ரூ.11 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. ரூ.50 ஆயிரம் வரையில் அவர் செலவு செய்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக அரவிந்தன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×