search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் திருமண நாளில் மணமகன் மாயம்- பெண் வீட்டார் அதிர்ச்சி
    X

    நாகர்கோவிலில் திருமண நாளில் மணமகன் மாயம்- பெண் வீட்டார் அதிர்ச்சி

    நாகர்கோவிலில் திருமண நாளில் மணமகன் மாயமானதால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி போலீஸ் சரகத்திற்குட்பட்ட வாலிபர் ஒருவர் சென்னையில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார். என்ஜினீயருக்கு அவரது பெற்றோர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் பேசி நிச்சயம் செய்தனர். இவர்களின் திருமணம் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடக்க இருந்தது.

    இதற்காக மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கினர்.

    திருமணத்தையொட்டி இருவீட்டிலும் உறவினர்கள் குவிந்திருந்தனர். மணமகன் வீட்டிலும் உற்சாகம் களை கட்டியது. மணமகனும் சென்னையில் இருந்து 2 நாட்களுக்கு முன்பே ஊருக்கு வந்து விட்டார்.

    நேற்றிரவு வீட்டில் மணமகனும், அவரது நண்பர்களும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தனர். இரவு 9 மணியளவில் மணமகன் வீட்டை விட்டு வெளியே சென்றார். குளிர்பானம் வாங்கி விட்டு சிறிது நேரத்தில் வந்து விடுவேன் என்று கூறி விட்டு நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார்.

    கடைக்கு சென்ற மணமகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கடை வீதிக்கு சென்று பார்த்தனர். மணமகனின் நண்பர்களையும் தொடர்பு கொண்டு கேட்டனர். எங்கு தேடியும் மணமகனை காணவில்லை.

    உறவினர்கள் பலரும் திரண்டு இருந்ததால் உற்சாகத்தில் மிதந்த மணமகன் வீடு, சிறிது நேரத்தில் களை இழந்தது. வீட்டில் இருந்தவர்கள் மணமகனை தேடி நாலாபுறமும் சென்றனர்.

    யாருடைய கண்ணிலும் மணமகன் சிக்கவில்லை. இதையடுத்து மணமகனின் உறவினர்கள் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாயமான மணமகனை தேட தொடங்கினர்.

    மணமகனின் செல்போன் எண்ணை கைப்பற்றி அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக மணமகனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது அது குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒருமலை கிராமத்தை காட்டியது.

    மணமகன் அந்த கிராமத்திற்கு எப்படி சென்றார்? யாரும் அவரை கடத்திச் சென்றார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணமகன் மாயமான தகவல் நாகர்கோவிலில் உள்ள மணமகள் வீட்டாருக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் மாயமாகி விட்ட தகவல் அறிந்ததும், மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இன்று காலை திருமணத்திற்கு வருவோருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்தனர். இதனால் மணமகள் வீடும், நாகர்கோவிலில் திருமணம் நடக்க இருந்த மண்டபமும் களை இழந்து காணப்பட்டது.

    Next Story
    ×