search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘என்கவுண்டரில்’ இதுவரை 80 பேர் சுட்டுக்கொலை
    X

    ‘என்கவுண்டரில்’ இதுவரை 80 பேர் சுட்டுக்கொலை

    தமிழகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடை 80 பேர் என்கவுண்டரில் சுட்டக்கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    தமிழகத்தில் குற்றவாளிகளை போலீசார் என்கவுண்டர் மூலம் முடிவுக்கு கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் 1980-ம் ஆண்டு தொடங்கி உள்ளது.

    நக்சலைட்டுகள் தலைதூக்க தொடங்கிய அந்த கால கட்டத்தில் போலீஸ் அதிகாரி தேவாரம், தீவிர நடவடிக்கை எடுத்தார். அதேபோல அப்போது திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சைலேந்திரபாபுவும் நக்சலைட்டுகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    பிறகு போலீசாரின் பார்வை ரவுடிகள் பக்கம் திரும்பியது. 1998-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே பிரபல ரவுடி ஆசைத் தம்பியை போலீசார் என்கவுண்டர் செய்தனர். நடுரோட்டில் போலீசாருடன் நடந்த மோதலில் ஆசைத்தம்பி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து அமர்க்களம் படத்தில் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது.

    2002-ம் ஆண்டு தமிழக போலீஸ் படை பெங்களூர் சென்று இமாம் அலி, அவரது கூட்டாளிகள் என 5 பேரை சுட்டுக்கொன்றனர். 2003-ம் ஆண்டு அயோத்தி குப்பத்தைச் சேர்ந்த தாதா வீரமணி நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    2004-ம் ஆண்டு தமிழகம், கர்நாடகாவை கலக்கிய சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை, அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் தலைமையிலான போலீஸ் படை சுட்டுக்கொன்றது. இதில் பணியாற்றியவர்களில் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரையும் ஒருவர். இவருக்கு இரட்டைப் பதவி உயர்வு கொடுத்து டி.எஸ்.பி.யாக தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார்.

    2007-ம் ஆண்டு சென்னையில் போலீசாருடன் நடந்த மோதலில் ரவுடி வெள்ளை ரவி சுட்டுக்கொல்லப்பட் டார்.

    2010-ம் ஆண்டு கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கால் டாக்ஸி டிரைவர் மோகன் ராஜ் சுட்டுக்கொல்லப் பட்டார். இதே ஆண்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு ஆகியோரும் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.

    2012-ம் ஆண்டு சிவகங்கையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஆல்வின் சுதனை கொலை செய்த ரவுடிகள் பிரபு, பாரதி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

    அதே ஆண்டு தென்சென்னையை கலங்கடித்த வங்கி கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் ஒரே இடத்தில் சுட்டு வீழ்த்தினர். வேளச்சேரியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அவர்களை தென்சென்னை இணை ஆணையராக இருந்த சண்முக ராஜேஷ்வரன் தலைமையிலான போலீஸ் படை சுட்டு வீழ்த்தியது.

    6 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2018-ம் ஆண்டு ரவுடிகள் சகுனி கார்த்திக், இருளாண்டி, முத்து, ஆகியோர் கொல்லப்பட்டனர்.

    பின்னர் ஜூலை மாதம் ராயப்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே குடிபோதையில் ஒரு கும்பல் ரகளை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ்காரர் ராஜவேலு அங்கு சென்றார். அவரை ரவுடி ஆனந்தன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். ஆனந்தன் அடையாறில் மத்திய கைலாஷ் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து போலீசார் அங்கு சென்றபோது ஆனந்தன் போலீசாரை தாக்க முயன்றார். அப்போது நடந்த என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டார்.

    கடந்த மாதம் சேலத்தில் ரவுடி கதிர்வேல் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

    ஒரு ஆண்டுக்கு பிறகு சென்னையில் இன்று போலீசாரை தாக்க முயன்ற ரவுடி வல்லரசு போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.

    அதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடை 80 பேர் சுட்டக்கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
    Next Story
    ×