search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு  நடந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கலந்து கொண்டபோது எடுத்தபடம்.
    X
    தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கலந்து கொண்டபோது எடுத்தபடம்.

    தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு சமஸ்கிருதம்- இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    சமஸ்கிருதம், இந்தி, நீட் தேர்வுகளை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    சமஸ்கிருதம், இந்தி, நீட் தேர்வுகளை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி நீலமேகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ஐ.ஜே.கே உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது, ஓட்டல்கள் கூட மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே காவேரி தீர்ப்பின்படி தண்ணீரை பெற்றிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை கூட்டி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனைத்து கட்சிகளையும், தமிழக எம்.பி.க்கள் அனைவரையும் அழைத்து சென்று மத்திய அரசிடம் வலியுறுத்தி காவிரி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்.


    தமிழகத்தில் நீட் தேர்வினால் ஒவ்வொரு ஆண்டும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி விட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த 6 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களின் உயிரைப் பறிக்கும் அந்த நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லை. சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி போடப்பட்ட தீர்மானம் என்னவாயிற்று? மத்திய அரசிடம் தமிழகத்திற்கு நாம் என்ன திட்டங்கள் வேண்டாம் என கூறுகிறோமோ அதைத்தான் அவர்கள் செயல்படுத்துகிறார்கள். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட தமிழகத்தை அழிக்கக் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி தொடர்ந்து வலியுறுத்தியும் அவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறார்கள். பாம்பிற்கும் நோகக்கூடாது கோலுக்கும் நோக கூடாது என்பது போன்ற தமிழக அரசின் இரட்டை வேட நடவடிக்கைதான் சமஸ்கிருதம், இந்தி திணிப்பு, நீட் தேர்வு, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×