search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வகுப்பறையில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்திய மாணவி இடைநீக்கம்
    X

    வகுப்பறையில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்திய மாணவி இடைநீக்கம்

    வகுப்பறையில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்திய மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    தேனி:

    தேனி அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மகள் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் பள்ளியில் உள்ள கணினி வழிக் கல்வி பயிற்சி வகுப்பறையில் சமூகவலைத்தள (இன்ஸ்டாகிராம்) பக்கத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தெரியவரவே பள்ளி நிர்வாகம் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக அந்த மாணவியை 2 நாட்கள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில் அந்த மாணவியின் பெற்றோர் தனது மகள் சமூகவலைத்தளத்தை பயன்படுத்தவில்லை என்று கூறி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், எனது மகள் தனியார் பள்ளியில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தியதாக கூறி பள்ளி நிர்வாகத்தினர் 2 நாட்கள் இடைநீக்கம் செய்துள்ளனர். ஆனால் எனது மகள் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவது இல்லை. எனவே எனது மகளை இடைநீக்கம் செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அந்த மனுவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேலிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இந்த புகார் மனுவை முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கொடுக்கும்படி தெரிவித்தார். இதையடுத்து அவர்கள், முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்துவை சந்தித்து மனு கொடுத்தனர். இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள், பெற்றோரை அழைத்து சமரசம் செய்து வைத்து அனுப்பினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், ‘தவறு செய்யும் மாணவ-மாணவிகளை இடைநீக்கம் செய்ய வேண்டாம் என்று பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக மாணவியின் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறியுள்ளேன் என்றார்.

    Next Story
    ×