search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் பலத்த காற்றுடன் மழை- மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    திருவண்ணாமலையில் பலத்த காற்றுடன் மழை- மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    திருவண்ணாமலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மின்கசிவால் ஒருவரை மின்சாரம் தாக்கியதால் பலியானார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலிலும் வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.

    குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக மழை வருமா? என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இரவு சுமார் 7 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும் அப்போது பலத்த காற்று வீசியது. சில இடங்களில் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் சரிந்து விழுந்தன.

    இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. தொடர்ந்து இரவில் மின்னல் அடித்து கொண்டிருந்தது.

    மேலும் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. கலெக்டர் அலுவலகம் அருகே மரங்கள், 2 மின்கம்பங்கள் சாய்ந்தன.

    காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சில இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து மின் வினியோகம் செய்யப்பட்டது.

    திருவண்ணாமலை புதுவாணியங்குள தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 27). பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மயங்கினார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மேலும் அவலூர்பேட்டை சாலையில் சரிவர கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் நேற்று இரவு அந்த பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    கிரிவலப்பாதையில் உள்ள குளங்களிலும் மழைநீர் தேங்கியது.

    திருவண்ணாமலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில வருமாறு:-

    திருவண்ணாமலை-41, ஆரணி-18, செய்யாறு-2, சாத்தனூர் அணை-5.2, போளூர்-11.2, தண்டராம்பட்டு-4, சேத்துப்பட்டு-24, கீழ்பென்னாத்தூர்-37, வெம்பாக்கம்-5.7

    Next Story
    ×