search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்னக ரெயில்வே துறையில் தமிழ் பேச தடை - நிலைய கட்டுப்பாட்டறை, மேலாளர்களுக்கு உத்தரவு
    X

    தென்னக ரெயில்வே துறையில் தமிழ் பேச தடை - நிலைய கட்டுப்பாட்டறை, மேலாளர்களுக்கு உத்தரவு

    தென்னக ரெயில்வே கட்டுப்பாட்டறை, நிலைய மேலாளர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலேயே பேசி தகவல்களை பரிமாற வேண்டும். தமிழில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்தியை கட்டாய பாடமாக்கும் மும்மொழி கல்வி திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து அந்த பிரச்சினை ஓய்ந்தது.

    இந்தநிலையில் ரெயில்வேயில் தமிழ் பேச தடை விதிக்கப்பட்டு இருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

    தென்னக ரெயில்வே கட்டுப்பாட்டறை மற்றும் நிலைய மேலாளர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலேயே பேசி தகவல்களை பரிமாற வேண்டும். தமிழில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    மதுரை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரெயில்கள் எதிர் எதிரே வந்து மிகப்பெரிய விபத்து நேர இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதற்கு காரணம் தகவல் பரிமாற்றத்தில் மொழி பிரச்சினையால் ஏற்பட்ட குழப்பம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தான் ரெயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.



    தென்னக ரெயில்வேயில் 6 டிவிசன்களிலும் கட்டுப்பாட்டறைகள் உள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்துதான் ரெயில் நிலைய மேலாளர்களுடன் தொடர்பு கொண்டு ரெயில்களின் இயக்கத்தை செயல்படுத்துகிறார்கள்.

    ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து அடுத்த ரெயில் நிலையத்துக்கு ரெயில் புறப்பட்டதும் அந்த ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர் சிக்னல் கொடுத்து ரெயிலை சரியான வழித்தடத்தில் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்வார்.

    இதில் பணிபுரிபவர்களிடையே நிலவும் மொழி பிரச்சினையை சரிசெய்ய இரு மொழியை கட்டாயமாக்கி இருப்பதாக கூறுகிறார்கள்.

    இதுகுறித்து ரெயில்வே தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஞானசேகரன் கூறியதாவது:-

    தமிழ் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவு கண்டனத்துக்குரியது. ஆங்கிலம் பொது மொழியாக இருக்கிறது. சிலர் ஆங்கிலமும் இந்தியும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள், சிலர் ஆங்கிலமும், தமிழும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். வெறும் இந்தி மட்டும் தெரிந்தவர்களும் உண்டு. எனவே தமிழ் மொழியை தவிர்க்க வேண்டும் என்பதை விட தமிழையும் சேர்ப்பதே நல்லது. மொழி பிரச்சினையால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொடர்வண்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், உண்மையில் இதன் பின்னணியில் மொழித் திணிப்பு நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது. இந்தி பேசும் வட இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், அவர்களின் இந்தியை தமிழ் பேசும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் புரிந்து கொள்ள முடியாததும் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும்.

    இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் வட இந்தியர்கள் தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொள்வதை கட்டாயமாக்குவது அல்லது தெற்கு தொடர்வண்டித்துறையில் முழுக்க முழுக்க தமிழர்களை நியமிப்பதுதான்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×