search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ஹெல்மெட்’ அணியாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களிடமும் அபராதம்
    X

    ‘ஹெல்மெட்’ அணியாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களிடமும் அபராதம்

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களிடமும் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் கடந்த 2007-ம் ஆண்டு மாதம் அமலுக்கு வந்தது.

    மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட உடனேயே போலீசார் அபராதம் வசூலிக்க தொடங்கவில்லை. ஆரம்பத்தில் விழிப்புணர்வு பிரசாரங்களையே மேற்கொண்டனர். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும் போலீசார் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதன்பிறகு ஹெல்மெட் வேட்டை தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டது.

    குறிப்பாக சென்னையில் ஹெல்மெட் சட்டம் நடைமுறைக்கு வந்த சில மாதங்களிலேயே அபராதம் விதிக்கும் பணியை போலீசார் தொடங்கினர். ஹெல்மெட் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இல்லாத காரணத்தால், போலீசார் ஆரம்பத்தில் அதில் வேகம் காட்டவில்லை.

    இதனால் மக்களின் உயிர் மேல் ஆசை கொண்ட சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது கோர்ட்டில் வழக்கு தொடுப்பதும், அதன் பின்னர் ஹெல்மெட் வேட்டை தீவிரப்படுத்தப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே வாடிக்கையாகி விட்டது. கோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை போலீசார் விரட்டி விரட்டி பிடித்து வழக்கு போடுவார்கள். பின்னர் இந்த வேகம் குறைந்து விடும்.



    அந்த வகையில் சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு போட்டார். அதில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீதும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்கள் மீதும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும் இது தொடர்பாக தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும், அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதனை விசாரித்த ஐகோர்ட்டு ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களின் லைசென்சை பறிமுதல் செய்தால் என்ன? என்று போக்குவரத்து போலீசாருக்கு கேள்வி எழுப்பியது.

    இதைத் தொடர்ந்து சென்னையில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களாக இந்த ஹெல்மெட் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் சட்டம் நடைமுறைப்படுத்தபட்டபோது மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இப்போதும் போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களிடமும் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்லும் பெண்களிடம் போலீசார் அபராதம் வசூலிக்க தயக்கம் காட்டுவதுண்டு. ஆனால் இப்போது போலீசார் பாரபட்சமின்றி பெண்களிடமும் அபராதம் வசூலிக்கிறார்கள். குடும்பத்தோடு செல்பவர்களை வழி மறித்தும் அபராதம் போடுகிறார்கள்.

    சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த வாரம் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பதற்காக 352 அதிநவீன எந்திரங்களை வழங்கினார். இதனை வைத்து தனித்தனி இடங்களில் அபராதம் வசூலிக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகி யோர் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி அபராத வேட்டையில் ஈடுபட்டுள் ளனர். இதன்மூலம் தினமும் 3500 பேரில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை போலீஸ் பிடியில் சிக்குவதாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

    போலீசார் ஹெல்மெட் வேட்டையை தீவிரப்படுத்திய பின்னர் பயந்து போய் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த பயம் மாறி ஹெல்மெட் அணிவதால் உயிருக்கு பாதுகாப்பு என்கிற உணர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் முழுமையாக ஏற்பட வேண்டும். அப்போதுதான் அனைவரும் ஹெல்மெட் அணிய தொடங்குவார்கள் என்பதே உண்மையாகும்.
    Next Story
    ×