search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் - பிரதமரை நாளை சந்தித்து பேசுகிறார்
    X

    எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் - பிரதமரை நாளை சந்தித்து பேசுகிறார்

    எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக் கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமரை நாளை (சனிக்கிழமை) அவர் சந்தித்து பேசுகிறார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை அமைத்தது. இந்தநிலையில், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக்கூட்டம் டெல்லியில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு, விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் செல்ல உள்ளனர்.



    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பிரதமர் நரேந்திரமோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அவர் அளிக்க உள்ளார். தமிழகம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமருடன் அவர் விவாதிக்க உள்ளார்.

    மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு முடிந்து அன்று மாலையே அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்று அ.தி.மு.க.வில் நிலவிய பிரச்சினைக்கு இந்த கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்த கையோடு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

    இதில் 7 தமிழர்கள் விடுதலை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இந்தநிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமராக 2-வது முறையாக மோடி பதவியேற்றபோது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது மீண்டும் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×