search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி ஆணையாளரை கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம்- சுரேஷ்ராஜன் எம்எல்ஏ அறிவிப்பு
    X

    மாநகராட்சி ஆணையாளரை கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம்- சுரேஷ்ராஜன் எம்எல்ஏ அறிவிப்பு

    நாகர்கோவில் நகர பகுதியில் குடிநீர், சாலை, குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படாவிட்டால் மாநகராட்சி ஆணையரை கண்டித்து விரைவில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மக்கள் பிரதிநிதிகளை மதிக்காமலும், தான் நினைத்ததை நடத்த வேண்டும் என்ற அதிகாரத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    மாநகராட்சியில் எந்த பகுதியும் சுத்தமாக இல்லை, சாக்கடைகள் நிரம்பி வழிகிறது. நாய்கள் கட்டுப்படுத்தப்படாமல் பலரையும் கடித்து வருகிறது. நாய்கள் கருத்தடை செய்வது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. ஆனால் வரி வசூல் மட்டுமே தற்போது நடந்து வருகிறது.

    விடுமுறைக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறந்து விட்டன, மக்கள் அதிக அளவில் சாலைகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் போது சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மழைக்காலம் தொடங்கும் முன்னர் வடிகால்களை சீர் செய்யாததால் அனைத்து கழிவுகளும் சாலையில் கொட்டுகிறது.

    புத்தன் அணை குடிநீர் திட்டம் என்று அனைத்து சாலைகளையும் தோண்டி வருகின்றனர். 52 வார்டுகளிலும் இந்த பணிகள் முடிந்தபின்னர் தான் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கும் என்று நகராட்சி ஆணையர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தற்காலிக சீரமைப்பு பணிகளையேனும் மேற் கொள்ள வேண்டும். நகரத் தில் 15, 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் கிடைக்கிறது. நாகர்கோவில் பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக குடிநீர் வழங்க வேண்டும். 52 வார்டுகளிலும் துப்புரவு பணியாளர் குப்பைகள் அள்ளி வந்த நிலையில் தற்போது அதில் பணியாளர்களை குறைத்து 26 வார்டுகளில் மட்டுமே பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைத்து வார்டு களிலும் குப்பைகளை அள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். குப்பைகள் உடனுக்குடன் அள்ளப்படாததால் அவை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    ஒரு மணி நேரம் மழை பெய்தாலே சாலைகள் குளமாகின்ற நிலையில் தான் இந்த மாநகராட்சி நிர்வாகம் நாகர்கோவில் நகரத்தை வைத்துள்ளது என்பது மிகவும் வேதனையானது.

    அவ்வை சண்முகம் சாலையை சீரமைக்க வேண்டும். கிருஷ்ணன் கோவில்- சி.பி.எச். சாலையை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக் போராட்டம் நடத்தி இருந்தோம். ஒரு வருடமாகியும் சீரமைக்க வில்லை.

    எனவே நாகர்கோவில் நகர பகுதியில் குறைகளையும், மாநகராட்சி ஆணையரின் போக்கையும் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து தெரிவிக்க உள்ளேன். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை ஆகும்.

    நாகர்கோவில் நகர பகுதியில் குடிநீர், சாலை, குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படாவிட்டால் மாநகராட்சி ஆணையரை கண்டித்து விரைவில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நகர செயலாளர் வக்கீல் மகேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவுது உடனிருந்தனர்.

    Next Story
    ×