search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதிகா, விக்னேஷ் தற்கொலை விவகாரம்:  ராமதாஸ் மீது வழக்கு தொடுப்போம்- திருமாவளவன்
    X

    ராதிகா, விக்னேஷ் தற்கொலை விவகாரம்: ராமதாஸ் மீது வழக்கு தொடுப்போம்- திருமாவளவன்

    கடலூரில் ராதிகா, விக்னேஷ் தற்கொலை விவகாரம் தொடர்பாக ராமதாஸ் மீது வழக்கு தொடர்வோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள குறவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மகள் கல்லூரி மாணவி ராதிகா என்பவரும் அவருடைய உறவினரும் காதலருமான விக்னேஷ் என்பவரும் 10.6.2019 அன்று குறுகியநேர இடைவெளியில் அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர் என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

    சமூக வலைத்தளமான முகநூல் பதிவுகளால் நேர்ந்த விபரீதமான விளைவுகள்தாம் இந்தத் துயரமான சாவுகள் என்பது தாள முடியாத வேதனையாக உள்ளது.

    வாழவேண்டிய வயதில் இரு உயிர்கள் திடீரெனப் பலியாகும் ஒரு அவலநிலை, முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் நிகழ்ந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

    இந்நிலையில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக, குறிப்பாக , பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய வலுவான சட்டமொன்றை இயற்ற வேண்டுமெனவும், ஆபாச வலைத்தளங்களை முற்றாக இந்தியாவில் தடை செய்ய வேண்டுமெனவும் மைய மாநில அரசுகளுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    மேலும், ராதிகா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் இழந்து வாடுகிற அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுகுறித்து காவல்துறையினர் நேரிய வழிமுறைகளில் விசாரணை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

    தற்போது பிரேம்குமார், அவரது தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர் வல்லரசு ஆகியோரை தற்கொலைக்குத் தூண்டியதாக காவல்துறை கைது செய்துள்ளது. அத்துடன், தொடர்ந்து காவல்துறையினர் குற்றப்புலனாய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் காவல்துறையினரின் நடவடிக்கைகளில் விடுதலைச்சிறுத்தைகள் எந்தவகையிலும் தலையிடவில்லை. ஆனால், பிரேம் குமார் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே, இந்த துயரச்சாவுகளுடன் விடுதலைச் சிறுத்தைதகள் கட்சியை வலிந்து இணைத்து, வழக்கம்போல மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பும் சதி முயற்சியில் பா.ம.க. ஈடுபட்டுள்ளது.

    பா.ம.க.வின் இத்தகைய அரசியல் சதிநோக்கையும் சமூகவிரோதப் போக்கையும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளோடு வேண்டுமென்றே விடுதலை சிறுத்தைகளைத் தொடர்புப்படுத்தி ஆதாரமற்றவகையில் அபாண்டமாக பழிசுமத்தித் தொடர்ச்சியாக அவதூறு பரப்பிவருவது பாமக நிறுவனர் ராமதாசின் வாடிக்கையாக உள்ளது.

    இது விடுதலைச்சிறுத்தைகளுக்கு எதிராக மட்டுமின்றி, அப்பாவி தலித் மக்களுக்கு எதிராகவும் அனைத்துச் சமூக மக்களிடையே கடும் வெறுப்பை விதைப்பதாக உள்ளது.

    மேலும், இது தலித்துகளுக்கு எதிரான சாதி வெறியாட்டத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது. இந்தப் பெருந்தீங்கிலிருந்து சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் மருத்துவர் ராமதாஸ் மீது விரைவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடுக்குமென்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வவாறு தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
    Next Story
    ×