search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைப்பற்றப்பட்ட 3 கள்ளத் துப்பாக்கிகள்
    X
    கைப்பற்றப்பட்ட 3 கள்ளத் துப்பாக்கிகள்

    கல்வராயன் மலை கிராமங்களில் வீடு வீடாக சோதனை - கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்

    கல்வராயன் மலை கிராமங்களில் புதரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த உரிமம் இல்லாத 3 நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றிய கருமந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரியகுட்டிமடுவு வனப்பகுதியில் கடந்த மாதம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், வனத்தை யொட்டி குடிசைக்குள் இயங்கிய கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலையை கண்டு பிடித்தனர்.

    வனப்பகுதியில் அரிதாகி வரும் தோதகத்தி ஈட்டி மரத்தை வெட்டும் மர்ம கும்பல், கள்ளத்தனமாக நாட்டுரகத் துப்பாக்கிக்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இக்கும்பல் விட்டுச்சென்ற 2 நாட்டுத் துப்பாக்கிகள், 16 ஈட்டி மரத்துப்பாக்கி கட்டைகள், உதிரி பாகங்கள் மற்றும் தயாரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட 32 பொருட்களையும் கைப்பற்றிய வாழப்பாடி வனத்துறையினர், நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே, கள்ளத்துப்பாக்கித் தொழிற்சாலையாக இயங்கி வந்த குடிசை கடந்த 22-ந் தேதி மர்மமான முறையில் தீயில் எரிந்து சாம்பலானது. கள்ளத்துப்பாக்கி கட்டைகள் பறிமுதல் வழக்கில் முக்கிய தடயமாக இருந்த குடிசையை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துவிட்டதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், சேலம் போலீஸ் எஸ்.பி தீபா கனிகர் தலைமையில், ஏ.டி.எஸ்.பி அன்பு, டி.எஸ்.பி.கள், சூரிமூர்த்தி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து மூன்று கூட்டுப்படைகள் அமைத்து கல்வராயன் மலை கருமந்துறை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, அத்திமரத்துக் காட்டு வலவு, ஈச்சங்காடு, தேக்கம்பட்டு ஆகிய கிராமங்களில், புதரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த உரிமம் இல்லாத 3 நாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து கருமந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் மட்டுமின்றி, வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டுப்படை அமைத்து துப்பாக்கி வேட்டை நடத்திய சம்பவம் மலை கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சேலம் போலீஸ் எஸ்.பி தீபாகனிகர் நிருபரிடம் கூறியதாவது:-

    வனப்பகுதியை யொட்டிய மலை கிராமங்களில் வனத்துறையினருடன் இணைந்து சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். கல்வராயன் மலை கிராமங்களில் கள்ளத்துப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால் கூட்டுப்படை அமைத்து சோதனை நடத்தப்பட்டது.

    உரிமம் பெறாமல் கள்ளத் துப்பாக்கிகளை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, பொதுமக்கள் யாரேனும் அனுமதி பெறாத துப்பாக்கிகள் வைத்திருந்தால் போலீஸாரிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×