search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது துப்பாக்கி சூடு
    X

    கரூரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது துப்பாக்கி சூடு

    பணத்தகராறில் வீடு புகுந்து தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கரூர்:

    கரூர் வாங்கப்பாளையம் சேரன் பள்ளி எதிர்புறம் உள்ள பூர்ணிமா கார்டன் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32), தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்த அவர், தனது குடும்பத்தினருடன்அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 கார்களில் 5 பேர் வந்தனர். வீட்டின் வளாகத்திற்குள் திபு, திபுவென புகுந்த அவர்கள், வாசலில் நின்று விக்னேஷ் பெயரை கூறி அழைத்தனர். அவர் சாப்பிட்டு கொண்டிருந்ததால் அவரது தந்தை லீலாகுமார், வந்துள்ளவர்கள் யார் என்பதை அறிய வெளியே சென்றார். அப்போது வாசல் முன்பு நின்று கொண்டிருந்தவர்கள் கைகளில் அரிவாள், துப்பாக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அவர்களிடம், உங்களுக்கு யார் வேண்டும், இங்கு ஏன் வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு எந்த பதிலும் அளிக்காதவர்கள், விக்னேசை கூப்பிடுங்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளனர். இதையடுத்து வீட்டிற்குள் இருந்த விக்னேஷ் வெளியே வந்தார். அப்போது திடீரென 5 பேரில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் விக்னேசை நோக்கி சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு விக்னேஷ் மீது பட வில்லை. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதையடுத்து ஆத்திரம் தீராத கும்பல், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் விக்னேசை வெட்ட முயன்றனர். மகன் மீது வெட்டுப்படாமல் இருக்க லீலாகுமார் தடுக்க முயன்றார். ஆனால் தந்தை மீது வெட்டுப்படாமல் இருக்க விக்னேஷ், லீலா குமாரை தள்ளி விட்டார்.இதில் விக்னேஷின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதனிடையே துப்பாக்கி சத்தம் கேட்டும், விக்னேஷின் அலறல் சத்தம் கேட்டும் அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். பொது மக்கள் வருவதை அறிந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து கார்களில் ஏறி தப்பி சென்று விட்டனர்.


    இது குறித்த தகவல் அறிந்ததும் வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விக்னேசை துப்பாக்கியால் சுட முயன்ற மர்ம நபர்கள் யார், எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

    விக்னேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் வடிவேல் நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து வெள்ளியை நகைகளாக தயாரித்து அதனை நகைக்கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழிலும் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நகைகளை கடைகளுக்கு சரியாக கொடுக்காமல் 2 பேரும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சேலம் போலீஸ் நிலையத்தில் 2 பேர் மீதும் வழக்குகள் உள்ளது.

    இதையடுத்து சக்திவேல் நிதி நிறுவனத்தில் இருந்து விலகி, திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த ஜெகன் என்பவரின் நிதி நிறுவனத்தில் விக்னேஷ் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இதனிடையே அவருக்கும், சக்திவேலுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்துள்ளது. அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முன்பு திருப்பூர் மூலனூரில் விக்னேஷ் வேலை பார்த்து வரும் நிதி நிறுவனத்திற்கு சக்திவேல் சென்றுள்ளார். அங்கிருந்த ஜெகனிடம் எப்படி விக்னேசை வேலைக்கு சேர்த்து கொள்ளலாம் என்று கூறி, அவரையும் துப்பாக்கியால் சுட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஜெகன் புகாரின் பேரில் மூலனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில்தான் நேற்றிரவு சக்திவேல் அவரது ஆதரவாளர்களுடன் கரூரில் உள்ள விக்னேஷ் வீட்டிற்கு சென்று துப்பாக்கியால் சுட்டு மிரட்டியுள்ளார். சக்திவேல் வைத்திருந்த துப்பாக்கி டம்மி துப்பாக்கியா? அல்லது நிஜ துப்பாக்கியில் டம்மி தோட்டாக்களை நிரப்பி சுட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி அவர் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். டி.எஸ்.பி. கும்மராஜா தலைமையிலான தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    சக்திவேல் விக்னேசை நோக்கி 4 ரவுண்டு சுட்டுள்ளார். இதனால் துப்பாக்கி சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்துள்ளனர். பொதுமக்கள் வந்ததால் விக்னேஷ் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×