search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த வாலிபர்களுக்கு 7 ஆண்டு ஜெயில்- கோர்ட்டு தீர்ப்பு
    X

    2 பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த வாலிபர்களுக்கு 7 ஆண்டு ஜெயில்- கோர்ட்டு தீர்ப்பு

    2 பெண்களின் தலையில் அம்மி குழவியை போட்டு நகைகளை கொள்ளையடித்த வாலிபர்களுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் டி.வலசை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏரிக்கரை கிடாரி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் ஒருநாள், ஆண்கள் மட்டும் சாமி கும்பிடுவார்கள். அதாவது இரவு முழுவதும் அந்த கோவிலில் ஆண்கள் தங்கியிருப்பார்கள். அப்போது ஆடுகளை வெட்டி சமையல் செய்து, மீதம் வைக்காமல் சாப்பிட்டு விட்டு காலையில் வீட்டிற்கு வருவார்கள்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஏரிக்கரை கிடாரி அம்மன் கோவிலில் இந்த திருவிழா நடந்தது. டி.வலசை கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டனர். பெண்கள் மட்டும் வீட்டில் இருந்தனர்.

    இந்த விழா குறித்து தெரிந்துக் கொண்ட திருவண்ணாமலை மாவட்டம் அத்திப்பாக்கத்தை சேர்ந்த அன்பு என்ற ஆல்பட் (22), திருவண்ணாமலையை சேர்ந்த பாபு என்ற மன்சூர் (26) ஆகியோர் அந்த கிராமத்துக்குள் புகுந்தனர்.

    அதிகாலை 2.40 மணிக்கு பெண்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அன்பு, அங்குள்ள ஒரு வீட்டிற்கு வெளியில் இருந்த அம்மி குழவியை தூக்கிக் கொண்டு, தன் ஆடைகளை எல்லாம் கலைந்து, முழு நிர்வாணமாக ஒரு வீட்டிற்குள் புகுந்தான்.

    அங்கு தூங்கிக் கொண்டிருந்த செந்தாமரை என்ற 55 வயது பெண்மணியின் முகத்தில் குழவியை போட்டான். அந்த பெண்மணி முகம் சிதைந்து மயங்கினார். அருகே படுத்திருந்த அவரது மகள் அன்பரசி (25) என்ற பெண்ணின் முகத்திலும் குழவியை போட்டான். அவரும் முகம் சிதைந்து மயங்கினார்.

    அவளது கழுத்தில் கிடந்த 4 கிராம் தாலி சரடு எடுத்துக் கொண்டான். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அன்பரசியின் குழந்தை கழுத்தில் கிடந்த 2 சவரன் சங்கிலியை திருடினான்.

    பின்னர், வீட்டை விட்டு வெளியில் வந்தான். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஊருக்குள் தற்சமயமாக வந்தார். அவர் ஒரு ஆண் முழு நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியில் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்து, திருடன் திருடன் என்று கத்தினார்.

    ஊரில் தூங்கிக் கொண்டி ருந்த பெண்கள் எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு, திருடனை பிடிக்க விரட்டினர். அதில், கிராமத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து, முருகன், மணி மேகலை என்ற பெண் ஆகியோரது கால்கள் முறிந்தன.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அன்பு, பாபு ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு திருவண்ணாமலை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

    நீதிபதி ஆர்.சங்கர் இந்த வழக்கை விசாரித்தார். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பித்தார். அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

    குற்றவாளிகள் இருவருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இரு பெண்களின் தலையில் பலத்த காயத்தை குற்றவாளிகள் ஏற்படுத்தியுள்ளனர். அன்பரசிக்கு 25 வயது தான் ஆகிறது. அவரால், தன் தலையை நிலையாக வைத்திருக்கக்கூட முடியவில்லை. ஒருபுறம் சாய்ந்த வண்ணம் உள்ளது.

    இதுமட்டுமல்லாமல், ரத்தம் மண்டைக்குள் உறைந்ததால், அவர்கள் இருவருக்கும் தலைவலி வேறு வருகிறது. எனவே, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க முடிவு செய்கிறேன்.

    எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 450 (ஆயுள் தண்டனை வழங்கும் குற்றச் செயல் என்று தெரிந்தும், அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்து அந்த குற்றத்தை செய்தல்) கீழ் 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், 394 (கொள்ளை அடிப்பதற்காக கொடூர ஆயுதம் கொண்டு கொடூரமாக தாக்குதல்) கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×