search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை
    X

    குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை

    குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந் நிலையில் பொதுமக்களுக்கும் குழந்தை தொழிலாளர் முறையை தடுப்பதில் மிக முக்கியப் பங்காற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    குறிப்பாக குழந்தையை வேலைக்கு அனுப்பும் பெற்றோரிடமும், குழந்தை தொழிலாளரை வேலைக்கு அமர்த்தும் நபரிடமும் குழந்தைகளை தொழிலாளர்களாக உட்படுத்தாதீர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பணிகளில் அரசு, தனியார் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

    14 வயதுக்கு கீழ் உள்ள ஆண் குழந்தை, பெண் குழந்தை ஆகியோரை குழந்தை தொழிலாளர் முறைப் படுத்துதல் மற்றும் தடைச் சட்டப்படி தொழிலாளர்களாக அமர்த்தக்கூடாது. சிறுவர் சிறுமியர்களுக்கு கல்வி கற்றல் மிகவும் இன்றியமையாத ஒன்று. சிறுவர் சிறுமியர் படிக்கின்ற வயதில் பள்ளிக்குச் சென்று பள்ளிக்கல்வியை கற்றால் தான் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.

    குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புவதையும், தொழிலாளர்களாக அமர்த்துவதையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றால் அரசும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்திய மாநில அரசுகள் பொது மக்களின் அன்றாட வாழ்விற்கு தேவையான பொருளாதாரம் ஈட்டும் வகையில் செயல்திட்டங்களை வகுத்து, தகுந்த வேலை வாய்ப்பை உருவாக்கி ஏழ்மை இல்லாத நிலையை ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    Next Story
    ×