search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா? - ஆம் என்கிறது புள்ளிவிவரம்
    X

    தமிழ்நாட்டில் இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா? - ஆம் என்கிறது புள்ளிவிவரம்

    இந்திமொழி வழி கல்விக்கு எதிராக மீண்டும் போர்க்குரல் எழுந்துள்ள நிலையில் தென்னிந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்தி மொழியை கற்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது.
    சென்னை:

    ஆறாம் வகுப்புக்கு மேல் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு சமீபத்தில் பரிந்துரை செய்தது. இந்த நிலைப்பாட்டுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், விரும்பாத மாநிலங்களில் நாங்கள் இந்தியை திணிக்க மாட்டோம் என்று மத்திய அரசு பின்வாங்கியது.

    இந்நிலையில், தென்னிந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்தி மொழியை கற்பதில் மாணவ-மாணவியர் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக, தட்சின பாரத் இந்தி பிரசார சபாவின் தலைவர் எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 5 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவியர்கள் இந்தி மொழி தேர்வு எழுதினர். இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் 2 லட்சத்து 4 ஆயிரம் மாணவ-மாணவியர்களும் கர்நாடகாவில் 60 ஆயிரம் மாணவ-மாணவியர்களும் கேரளாவில் 21 ஆயிரம் மாணவ-மாணவியர்களும் கடந்த 2018-ம் ஆண்டில் இந்தி மொழி தேர்வு எழுதினர்.

    கடந்த 2009-ம் ஆண்டுவாக்கில் தமிழ்நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் இந்தி தேர்வு எழுதி இருந்தனர். அந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 5 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பரவலாக கடந்த பத்தாண்டுகளில் இந்தி மொழியை கற்பதில் ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×