என் மலர்

  செய்திகள்

  ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல்- பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்கியதால் அதிருப்தி
  X

  ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல்- பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்கியதால் அதிருப்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உள்ளாட்சி தேர்தலை ஆகஸ்டு மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. வார்டு வரையறை செய்யப்பட்டதில் பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
  சென்னை:

  உள்ளாட்சி தேர்தல் 5 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்து சேரும்.

  தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு 2016-ல் மீண்டும் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

  ஆனால் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை முறையாக ஒதுக்கவில்லை என்று ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதனால் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.

  அதன்பிறகு இடஒதுக்கீடு முறையை சரி செய்த மாநில தேர்தல் ஆணையம், உடனே தேர்தலை நடத்தவில்லை. மாறாக வார்டுகளை மறுவரையறை செய்து மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகளை பிரிப்பதாக காரணம் கூறினர். இந்த பணிகள் முடிந்ததும் ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டுகளை கண்டறிந்து பிரிக்கும் பணி நடைபெறுவதாக அறிவித்தனர்.

  இதன்பிறகு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த போவதாக அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டம் கொண்டு வந்தார்.

  பின்னர் இந்த சட்டத்தை காரணம் காட்டி வார்டுகள் பிரிக்கும் பணி நடைபெறுவதாக காரணம் கூறப்பட்டது. இப்படி கடந்த 2½ வருடங்களாக ஒவ்வொரு காரணங்களை கூறி உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்தனர்.

  இதன் காரணமாக மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வராமலேயே உள்ளது. இதனால் வளர்ச்சி பணிகளை முழுமையாக செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

  உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாததால் தனி அதிகாரிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.

  இப்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தபோவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் அந்த வாக்காளர் பட்டியலை மையமாக வைத்து வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலைபிரித்து அதன் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  தற்போது இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

  ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

  இந்த தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  ஆனால் இதிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் யாராவது கோர்ட்டுக்கு சென்று தடை உத்தரவு வாங்க வாய்ப்புள்ளது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

  இதுபற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

  “உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க. அரசு பல்வேறு காரணங்களை கூறி வருகிறது. இப்போது பெண்களுக்கு வார்டுகளை ஒதுக்கியதில் பல்வேறு குறைகள் காணப்படுகிறது.

  பல இடங்களில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளை பெண்கள் வார்டாக மாற்றி உள்ளனர். ஆளும் கட்சிக்கு சாதகமான பகுதிகளை ஆண்கள் வார்டாக மாற்றி விட்டதாக புகார்கள் வருகின்றன.

  ஆனாலும் தி.மு.க. சார்பில் நாங்கள் கோர்ட்டுக்கு போவதாக இல்லை. எப்படி இருந்தாலும் தேர்தலை சந்திக்க தயாராகவே இருக்கிறோம்” என்றார்.

  முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் முகப்பேர் பி.வி.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

  பெண்கள் வார்டு, ஆண்கள் வார்டு பிரிக்கப்பட்டதில் பாகுபாடு காணப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. 50 சதவீத இட ஒதுக்கீடுபடி 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் 105 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  முகப்பேர் கிழக்கு கலெக்டர் நகர் பகுதி (வார்டு 89) 2016-ம் ஆண்டு பட்டியலில் பெண்கள் வார்டாக இருந்தது. ஆனால் இப்போது அதை ஆண்கள் வார்டாக மாற்றி உள்ளனர். ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளர் இங்கு உள்ளதால் அவரது தலையீடு இருப்பதாக கூறுகின்றனர்.

  மதுரவாயல் 146-வது வார்டு ஆண்கள் வார்டாக இருந்தது. இப்போது பெண்கள் வார்டாக மாற்றி விட்டனர்.

  மக்கள் தொகை அடிப்படையில் பெண்கள் வார்டு பிரிக்கப்பட்டதா? அல்லது வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பெண்கள் வார்டு பிரிக்கப்பட்டதா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

  பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் சில வார்டுகளை ஆளும் கட்சிக்கு சாதகமாக மாற்றி விட்டார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

  நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி விட்டது.

  அடுத்து உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அனைத்து மாநகராட்சிகளையும் கைபற்றிவிடும் அளவுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.

  எனவே இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் ஆகஸ்டு மாதம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகவே தெரிகிறது. மாநில தேர்தல் ஆணையம் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×