search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை?- போலீஸ் அதிகாரிகள் நேரில் விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு
    X

    கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை?- போலீஸ் அதிகாரிகள் நேரில் விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

    கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    வெயில் அதிகமாக இருப்பதால் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பு வக்கீல் கூறினார்.

    தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை என்று கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், ‘கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று ‘பைக் ரேசில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்துள்ளனர், மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் கூட ஹெல்மெட் அணியவில்லை’ என்று வேதனைப்பட்டனர்.


    சட்டவிரோதமாக நடத்தப்படும் பைக் பந்தயத்தை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அரசு தரப்பு வக்கீல் கூறினார்.

    இதனையடுத்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து ஜூன் 6-ந்தேதி போக்குவரத்து காவல்துறையின் இணை மற்றும் துணை கமி‌ஷனர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×