search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி கிடைக்குமா?
    X

    உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி கிடைக்குமா?

    பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்காக கடுமையாக உழைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது.

    தி.மு.க.வின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு மு.க. ஸ்டாலினின் பிரசாரம், கூட்டணி வியூகம் என பல காரணங்கள் கூறப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரமும் சிறப்பாக இருந்ததாக மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்று உதயநிதி ஸ்டாலின் செய்த பிரசாரமும் அணுகுமுறையும் பெருவாரியான கட்சி தொண்டர்களையும், மக்களையும் கவர்ந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த தேர்தலில் கட்சிக்காக கடுமையாக உழைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    முன்னாள் மத்திய மந்திரியும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றவருமான டி.ஆர்.பாலு இதை முதன்முதலாக வலியுறுத்தினார். அவரது கருத்தை தி.மு.க.வில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஆதரித்துள்ளனர். எனினும் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் கூறவில்லை.

    தற்போது தி.மு.க.வின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று தலைமைக்கு கடிதங்கள் அனுப்பி வருகிறார்கள்.



    தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி என்பது மு.க.ஸ்டாலின் நீண்ட காலமாக வகித்து வந்த பதவி ஆகும். 2012-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் இளைஞரணியில் சீரமைப்பைக் கொண்டு வந்தார்.

    2017-ம் ஆண்டு இளைஞரணி செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கினார். ஆனால் அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. எனவே அவரை மாற்றி விட்டு உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக உதயநிதிக்கு கட்சியின் பதவி வழங்கப்படும் என தி.மு.க. நிர்வாகிகள் கூறினர்.

    Next Story
    ×