search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் மின் தடையால் அவதி- பயணிக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க ரெயில்வே துறைக்கு உத்தரவு
    X

    ரெயிலில் மின் தடையால் அவதி- பயணிக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க ரெயில்வே துறைக்கு உத்தரவு

    ரெயிலில் ஏற்பட்ட மின் தடையால் அவதியடைந்த பயணிக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க ரெயில்வே துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 24-ந்தேதி புறப்பட்ட சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பால்ராஜ் என்பவர் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்தார். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பயணம் செய்த பெட்டியில் மின் தடை ஏற்பட்டது.

    மாலை 5.50 மணிக்கு ஏற்பட்ட மின் தடை இரவு 8.25 மணிவரை சரியாகவில்லை. சுமார் 2½ மணி நேரம் மின் தடையால் அந்த பெட்டி முழுவதும் இருளில் மூழ்கியது. மின் விசிறிகளும் ஓடவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இருளில் குழந்தைகளை தொலைத்து விடக்கூடாது என்ற அச்சமும் அவர்களை வாட்டியது.

    ரெயில் அரக்கோணம் வந்ததும் ரெயில்வே ஊழியர்கள் வந்து பழுது பார்த்து மின் தடையை சரி செய்தனர். அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எனினும் மின் தடையால் அவதியடைந்த பால்ராஜ் சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் சமரச தீர்வு மையத்தில் புகார் செய்தார்.

    அதில், மின் தடையால் அவதியடைந்த எனக்கு நஷ்டஈடாக ரூ.3 லட்சம் வழங்க ரெயில்வே துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார். அதன் பேரில் நுகர்வோர் சமரசத்தீர்வு மையம் விசாரணை நடத்தியது.

    அப்போது புகாரில் குறிப்பிட்டிருந்த பெட்டியில் மின் தடை ஏற்பட்டதை தெற்கு ரெயில்வே ஒப்புக்கொண்டது. ரெயில் இயக்க கட்டுப்பாட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டதாக விளக்கம் அளித்த ரெயில்வே அதிகாரிகள், மின் தடை புகார் வந்ததும் அடுத்த நிறுத்தத்திலேயே ஊழியர்களால் சரி பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

    இதை ஏற்றுக் கொண்ட நுகர்வோர் சமரச தீர்வு மைய தலைவர் லட்சுமிகாந்தம், புகார்தாரருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்க தென்னக ரெயில்வேக்கு உத்தரவிட்டார்.
    Next Story
    ×