search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? - ராமதாஸ் விளக்கம்
    X

    அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? - ராமதாஸ் விளக்கம்

    அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? என்பது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அ.திமு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான். பாராளுமன்ற மக்களவைக்கானத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு திராவிட கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவது தான் வாய்ப்பாக இருந்தது.

    அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று 2011-ம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? ஆகிய வினாக்கள் எழுந்தன.

    2011-ம் ஆண்டு தீர்மானத்தில் உறுதியாக இருந்து மக்களவையில் போதிய பிரதிநிதித்துவம் பெறாமல் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க முடியாமலும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை போராடிப் பெற முடியாமலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் சிறிய தற்காலிக சமரசத்தைச் செய்து கொண்டு மேற்கண்ட இரு கட்சிகளின் ஒன்றுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுக்கப் போகிறோமா? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாக்கப்பட்டேன். மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.

    அடுத்து அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி? என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான திட்டங்களைப் போராடி பெற்றாலும், அதை செயல்படுத்துவதில் பெருந்துணையாக எந்தக்கட்சி இருக்கும்? என்ற வினாவுக்கு கிடைக்கும் விடைதான், யாருடன் கூட்டணி என்ற வினாவுக்குமான விடை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

    அ.தி.மு.க. மீது விமர்சனங்களே இல்லையா? என்று கேட்டால் இல்லை என்று பதிலளிக்க முடியாது. ஆனால் கல்வித்துறை சீர்த்திருத்தங்கள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த பல்வேறு யோசனைகளை அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொண்டது.



    7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரைத்தது. பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது. கடலூர்- நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோக் கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை கொள்கை அளவில் கைவிட்டது.

    விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தது, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது என பா.ம.க. சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அ.தி.மு.க. அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி உள்ளது.

    அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன் கருதி மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவற்கும், அ.தி.மு.க. அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. மத்தியில் புதிதாக அமையவிருக்கும் அரசில் தமிழகத்திற்கான திட்டங்களையும், உரிமைகளையும் போராடிப் பெறும் வி‌ஷயத்தில் இணைந்து செயல்படவும் அ.தி.மு.க.வும்., பா.ம.க.,வும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு தமிழகத்திற்கு பல நன்மைகளை பெற்றுத்தரும் என்று பா.ம.க. நம்புகிறது. கூட்டணி வி‌ஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்துகொண்டாலும் கூட, அதன் மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அந்த முடிவு மிகவும் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    அதன்படி 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படவும், இந்த கூட்டணியில் இணையும் அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைக்கவும் பா.ம.க. தீர்மானித்துள்ளது.

    தமிழகத்தின் நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ம.க. பாடுபடும். அதேநேரத்தில் பா.ம.க. அதன் கொள்கைகளில் எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளாது.

    கடந்த காலங்களில் எப்படி தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டதோ, அதேபோல் இனிவரும் காலங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி செயல்படும். எந்த தருணத்திலும் மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் பா.ம.க. விட்டுக் கொடுக்காது என உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies

    Next Story
    ×