search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுக்காகவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
    X

    ஓட்டுக்காகவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    ஓட்டுக்காகவே மத்திய-மாநில அரசுகள் உதவித்தொகை வழங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #MKStalin #DMK
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்திலும், நிலக்கோட்டை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் ஏறக்குறைய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. அனைத்து ஊராட்சிகளிலும் இதுபோன்று ஊராட்சி சபை கூட்டங்களை நாம் நடத்தி வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி இந்த பயணத்தை தொடங்கினோம். இப்போது ஏறக்குறைய 90 முதல் 95 சதவீதம் ஊராட்சி சபை கூட்டத்தை முடித்திருக்கின்றோம். வருகின்ற 17-ந் தேதிக்குள் (நாளை) முழுமையாக முடிக்கவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டு அந்த பணியை செய்து கொண்டிருக்கின்றோம்.

    மத்தியில் மோடி தலைமையில் ஒரு பாசிச ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. அதுபோல், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி ஒரு கொடுமையான நிலையில் நடந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கு திடீர், திடீரென்று மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியும், மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியும் சில அறிவிப்புகளை செய்கின்றார்கள்.

    நாடாளுமன்ற தேர்தல் வரப்போகின்ற காரணத்தால் தங்களுடைய ஆட்சி முடியப்போகிற சூழலால் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இதுவரைக்கும், சொன்ன எந்த வாக்குறுதியையும் இவர்கள் யாருக்கும் செய்ததில்லை. இப்போது திடீரென்று விவசாயிகளுக்காக ரூ.6 ஆயிரம் நிதி கொடுக்கப்போகின்றோம் என்கிறார்கள். முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொடுக்கப்போகின்றோம் என்று ஒரு அறிவிப்பை மோடி வெளியிட்டிருக்கின்றார்.

    உடனே, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எடப்பாடியும் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு நாங்கள் ரூ.2 ஆயிரம் கொடுக்கப்போகின்றோம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். இது ஓட்டுக்காக கொடுக்கக்கூடிய பணம் என்பதை நாட்டு மக்கள் இன்றைக்கு நன்றாக தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த தி.மு.க. கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தபோது எடுத்த படம்

    இப்போது இருக்கக்கூடிய ஆட்சியை பொறுத்தவரைக்கும், இருக்கக்கூடிய பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். பதவி போய்விட்டால், கொள்ளையடிக்க முடியாது, பதவி போய்விட்டால் அமைச்சராக இருக்க முடியாது. பதவி போய்விட்டால் ஊழல் பண்ண முடியாது. எனவே, அந்த பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கக்கூடிய நிலை தான்.

    இப்போது பார்த்தீர்கள் என்றால், ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு இது ஒரு மெஜாரிட்டி ஆட்சிகூட இல்லை. இது ஒரு மைனாரிட்டி ஆட்சி. அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. எனவே மக்களைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை. ஆட்சியை காப்பாற்றினால் போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். எனவே ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், எப்படி மக்களைப் பற்றி கவலைப்படுவார்கள். நிச்சயமாக கவலைப்பட மாட்டார்கள்.

    உள்ளாட்சி தேர்தலை, இதுவரைக்கும் இந்த ஆட்சி நடத்தவில்லை. ஏன் நடத்தவில்லை என்றால், அப்படி நடத்தினால் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் ஜெயிக்க முடியாது. தி.மு.க. காரர்கள் ஜெயித்து வந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் இதுவரை தேர்தலை தள்ளிப்போட்டு வந்துவிட்டார்கள்.

    எனவே, இப்போது ஒரு உறுதியை நான் உங்களிடத்தில் சொல்லப்போகின்றேன். தி.மு.க.தான் ஆட்சிக்கு வரப்போகின்றது என்ற அந்த நம்பிக்கையில் தான் நீங்கள் எல்லோரும் வந்திருக்கின்றீர்கள். ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தப்போகின்றோம்.

    நாடாளுமன்ற தேர்தல் வரப்போகின்றதோ இல்லையோ, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வராதா என்ற ஏக்கம் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கின்றது. எது எப்படி இருந்தாலும், அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.வுக்கு வழங்குகின்ற நேரத்தில் தமிழ்நாட்டில் நிச்சயமாக ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கூட்டம் தொடங்கிய உடன் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். #MKStalin #DMK
    Next Story
    ×