search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரியில் மூடப்பட்ட ரன்னிமேடு ரெயில் நிலையம் விரைவில் திறக்கப்படும்
    X

    நீலகிரியில் மூடப்பட்ட ரன்னிமேடு ரெயில் நிலையம் விரைவில் திறக்கப்படும்

    நீலகிரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ரன்னிமேடு ரெயில் நிலையம் விரைவில் திறக்கப்படும் என தென்னக ரெயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஊட்டி மலை ரெயில் முக்கிய இடம் பெறுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை 46.5 கிலோமீட்டர் கொண்ட இந்த மலை ரெயில் பாதையின் இரு புறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன.

    இதை ரசிக்கவே சுற்றுலா பயணிகள் மலை ரெயில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரெயிலில் தான் பல்சக்கர தண்டவாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் மலை ரெயில் இந்த பாதையில் உள்ள ரன்னி மேடு ரெயில் நிலையத்தில் நின்றுதான் செல்லும். இந்த ரன்னிமேடு ரெயில் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது.

    லண்டன் மாநகரில் உள்ள ரன்னிமேடு என்ற இடத்தை நினைவு கூறும் விதமாக ஆங்கிலேயர்கள் இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு ரன்னிமேடு என்று பெயரிட்டனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை அமைக்கப்பட்டுள்ள ரெயில் பாதை மலைரயில் பாதையாக உள்ளது.

    இந்த பாதையில் கல்லாறு முதல் குன்னூர் வரை பல்சக்கர தண்டவாளமாக அமைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை 10 ரெயில் நிலையங்கள் செயல்பட்டு வந்தன. இதில் குன்னூர் மேட்டுப்பாளையம் ரெயில்பாதையில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த ரன்னிமேடு ரெயில் நிலையம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த ரெயில் நிலையத்தை திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் ரன்னிமேடு ரெயில் நிலையத்தை மேம்படுத்தி ரெயில் நிலையம் புனரமைப்பு பணி தற்போது தீவிரமாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் இந்த பணிகளை பார்வையிட தென்னக ரெயில்வே பொதுமேலாளர் குல்சேஷ்த்ரா மற்றும் சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் ரெயில்வே அதிகாரிகள் சிறப்பு மலை ரெயில் மூலம் சென்று பார்வையிட்டனர். அங்கு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து நடைபெறும் பணிகளை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    பின்னர் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் குல்சேஷ்த்ரா கூறியதாவது,

    ரன்னிமேடு ரெயில் நிலையத்தை பார்வையிட்டு அமைக்கப்பட்டுள்ள புல்தரைகள், சூரிய ஒளி தானியங்கி விளக்குகளையும் இயற்கை எழில் கொஞ்சும் ரன்னிமேடு ரெயில் நிலையம் விரைவில் திறக்கப்படும்.

    மேலும் பல்வேறு பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஹில்குரோவ் முதல் ஊட்டி வரையில் உள்ள ரெயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகளுக்காக நவீன கழிவறைகள் கட்டப்படும்

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×