search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி - வைகோ அறிவிப்பு
    X

    பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி - வைகோ அறிவிப்பு

    திருப்பூருக்கும், கன்னியாகுமரிக்கும் வருகை தரும் பிரதமர் மோடி அவர்களுக்கு எனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டம் நடைபெறும் என வைகோ கூறியுள்ளார். #Vaiko #PMModi
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு மத்தியில் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கின்றது. அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து வரும் பா.ஜ.க. அரசு, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து வருகிறது. ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று மதவெறி சனாதன சக்திகள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருவதை நிலைநாட்டும் வகையில், மோடி அரசு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவது பேராபத்து ஆகும்.

    மதசகிப்பின்மை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு எனும் பெயரால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தோர் நியமனம், திட்டக்குழு கலைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட நிதிஆயோக் மூலம் மாநில உரிமைகள் பறிப்பு, கல்வித்துறை காவிமயம், அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் மத்திய அமைப்புகளின் சீர்குலைவு போன்றவை நாடு பாசிசத்தின் கோரப்பிடியில் போய்க் கொண்டிருப்பதையே காட்டுகிறது.

    மத்திய பா.ஜ.க. அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வருவது அவரது உரிமை. ஆனால் தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் இழைத்து வரும் பிரதமர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது.



    அதன்படி பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூருக்கும், பிப்ரவரி 19-ம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தந்து அரசு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Vaiko #PMModi
    Next Story
    ×