search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலி -  2 வாலிபர்கள் படுகாயம்
    X

    கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலி - 2 வாலிபர்கள் படுகாயம்

    கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலியானார். 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை ஆனைகட்டி அருகே உள்ள கண்டிவழியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கூலித் தொழிலாளி.

    இவர் நேற்று இரவு கொண்டனூர்புதூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் பணப்பள்ளியில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை துதிக்கையால் முருகனை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் யானை தாக்கி முருகன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் வனத்துறையினர் மற்றும் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    கோவை பூச்சியூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அடிக்கடி மலைப்பகுதியில் இருந்து இறங்கி வந்து மலையடிவார பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விளைபொருட்களை நாசப்படுத்தி செல்கிறது.

    இந்த மலையடிவார பகுதியில் ஹைடெக் சிட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு அடிக்கடி யானைகள் வரும் என்பதால் இங்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த பகுதிக்கு சென்று மது குடிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.

    நேற்று இரவு இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது மலைப்பகுதியில் இருந்து 2 யானைகள் இறங்கி வந்தது. இதனை பார்த்த இளைஞர்கள் அலறியடித்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை பார்த்த யானைகள் இளைஞர்களை விரட்ட தொடங்கியது.

    அப்போது ஒரு ஆண் யானை சென்னை சிட்டலபாக்கம் நேரு நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 37), துடியலூர் ஆர்.எஸ். ரோட்டை சேர்ந்த மனோஜ் கார்த்திக் (31) ஆகியோரை துதிக்கையால் தூக்கி வீசியது.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி யானைகளை காட்டுக்குள் விரட்டினர். பின்னர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×