search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் - கமல்ஹாசன் உறுதி
    X

    பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் - கமல்ஹாசன் உறுதி

    தமிழகத்திற்கு நல்ல மாற்றம் நடக்கும் என்றால் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #Parliamentelection
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல் நிகழ்த்தி வருகிறார்.

    தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறித்துவ கல்லூரியில் கலந்து கொண்டு வாக்களிப்பதின் அவசியம் குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதன் விபரம்: -

    ‘நான் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன். தமிழகம் ஒரு பெரிய சோதனையை சந்திக்க உள்ளது. அதை எதிர்கொள்ள மாணவ மாணவிகள் தயாராக இருக்க வேண்டும். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். வாக்களிக்க தவறி விடக்கூடாது. மகிழ்ச்சியாக வாழ்வதில் மற்ற நாடுகளை விட நாம் பின்னோக்கி இருக்கிறோம்.

    ஒரு முறை சரியாக வாக்களித்தால் மக்கள் துணிச்சலாக பேச தொடங்குவார்கள். தமிழகத்தை எந்த எந்த அரங்கில் முன்னேற்ற முடியுமோ, அங்கே எல்லாம் முன்னேற்றி செல்வேன். வாக்களிப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்... அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்களை வரவேற்கிறோம். நீங்கள் முன்னரே யோசித்து முடிவு செய்து வாக்களிக்க வேண்டும்...

    அரசியலில் இருக்கும் குறைகளை சொல்ல இங்கே தரப்பட்டு இருக்கும் நேரம் போதாது. ஊழல் தான் பெரும் பிரச்சினை. அதற்கு மக்களும் ஒத்துழைக்கிறார்கள். அரசும், அரசாட்சியும் பக்கவாத்தியமாக தான் இருக்க வேண்டும். மக்கள் தான் முதலாளிகள்.

    திருட்டை கட்டுப்படுத்த வேண்டும், தண்ணீரை அளவாக செலவழிக்க வேண்டும். வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது. வாக்குக்கு பணம் வாங்க மாட்டேன் என்று மாணவர்கள் உறுதிமொழி கூற வேண்டும். அரசு மக்கள் பணத்தை திருடுவதை நிறுத்தினால் உங்களுக்கு வர வேண்டிய திட்டங்கள் வந்து சேரும். இங்கே 60 சதவீதம் திருட்டு நடக்கிறது.

    நல்லவர்கள் இருக்கும் அரசாங்கம் இருந்தால் நான் ஏன் வரவேண்டும்? யாரும் இல்லாததால் வருகிறேன். முன்பே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும். ஏன் தாமதமாக வந்தேன் என்று தான் வருத்தப்படுகிறேன்.

    வாக்குக்காக பணம் வாங்கி பயன் இல்லை. என்ன வாக்குறுதி அளிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அதுபோன்ற வாக்குறுதியை மக்கள் நீதி மய்யம் அளிக்கும் என்று உறுதி அளிக்கிறேன். உங்கள் பணத்தை 100 மடங்காக்க மக்கள் நீதி மய்யம் செயல்படும். எங்கள் பாக்கெட்டை நிரப்பாமல் இருந்தால் தான் மக்களுக்காக செய்ய முடியும்.

    என்னுடைய நோக்கம் தமிழகம் தான். டெல்லி சென்று ஜி என்கிற அடைமொழியுடன், சிலர் 2ஜியுடன் திரும்புகிறார்கள். எனக்கு 1ஜியோ, 2ஜியோ முக்கியம் இல்லை. தமிழக நலன் தான் முக்கியம்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு நல்ல மாற்றம் ஏற்படும் என்றால் நிச்சயம் பங்குபெறுவேன். நாற்காலியில் சிலர் உட்கார்ந்ததும் அதை பிடித்துக்கொண்டு விடவில்லை. அதுபோல் இருக்கக்கூடாது.

    கையாடல், ஊழல், பிக்பாக்கெட் அனைவருமே திருடர்கள் தான். காவேரிக்காக நிச்சயம் போராட வேண்டும். இயற்கைபடி தான் நதி ஓட வேண்டும் இது சட்டம். உலகம் நமக்காக உருவாக்கப்பட்டது என்பதை மறந்து நாம் அதில் ஒரு பங்கு என்று நினைக்க வேண்டும்.

    ஓட்டிற்காக பணம் வாங்குவதை முதலில் நிறுத்த வேண்டும். இளைஞர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவதை நிறுத்த வலியுறுத்த வேண்டும். தமிழகம் முன்னேற இளைஞர்கள் சீர்திருத்தம் செய்ய முன்வர வேண்டும். தமிழ்நாடு தக்கையாக உள்ளது. அதனை மீண்டும் முழு உருவம் பெற முதல் தலைமுறை வாக்களார்கள் இளைஞர்கள் கையில் உள்ளது’.

    தனியார் கல்லூரியில் ஓவியம் வரைந்ததற்கு வந்த எதிர்ப்புகள் பற்றி மாணவி கேட்டதற்கு ‘ஓவியத்தில் என்ன வரைந்தீர்கள் என்பது எனக்கு தெரியாது. பேசக்கூடாதது பல உள்ளது’ என்றார்.

    அதற்கு மாணவிகள் ‘நாங்கள் பேசக்கூடாததை தான் ஓவியத்தில் பேசியுள்ளோம்’ என்றனர். அதற்கு கமல் ‘எனக்கு மத நம்பிக்கை கிடையாது’ என்று பதில் அளித்தார்.

    கமல் கலந்துரையாடலை முடித்த பின்னர் ஒரு மாணவி மேடையில் ஏறி கமலிடம் ‘நீங்கள் தான் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராக வரவேண்டும். பாராளுமன்ற தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்துங்கள். நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்’ என்றார்.

    அதற்கு கமல் ‘நிச்சயமாக. எனக்கு நாட்டை விட தமிழ்நாடு தான் முக்கியம். அதற்கு நீங்கள் எல்லோரும் உறுதி அளிக்க வேண்டும்’ என்றதும் மாணவிகள் அனைவரும் உறுதியளிப்பதாக கூறினார்கள். #KamalHaasan #Parliamentelection
     
    Next Story
    ×