search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே ஊருக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம்
    X

    கோவை அருகே ஊருக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

    கோவை அருகே ஊருக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் மணி (55). விவசாயி. இவரது தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு இருந்த 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று சேதப்படுத்தியது.

    பின்னர் அங்கிருந்த சிவக்குமார் வீட்டின் காம்பவுண்டு சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. வீட்டில் சிவக்குமாரும் அவரது மனைவி முத்துவும் தூங்கி கொண்டு இருந்தனர். யானை காம்பவுண்டு சுவரை உடைக்கும் சத்தம் கேட்டு விழித்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். யானை வீட்டிற்குள் நுழைந்து விடும் என்ற அச்சத்தில் இருவரும் சமையல் அறையில் பதுங்கி கொண்டனர்.

    சற்று நேரம் அங்கிருந்த யானை பின்னர் அப்பகுதி செட்டியார் தோட்டத்தில் உள்ள விஜய கோபால் தோட்டத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து பெரிய நாயக்கன் பானையம் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மேற்கு தொடர்ச்சி மலை பூச்சியூர் பகுதிக்கு யானையை விரட்டி விட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் விநாயகன், சின்னதம்பி ஆகிய இரு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதில் விநாயகன் யானையை பிடித்து முதுமலையில் விட்டனர். தற்போது ஊருக்குள் புகுந்து இருப்பது மற்றொரு யானையான சின்னதம்பியாக இருக்கலாம் என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×