search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணி அமையுமா?: பொன். ராதாகிருஷ்ணன் பதில்
    X

    தமிழகத்தில் பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணி அமையுமா?: பொன். ராதாகிருஷ்ணன் பதில்

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைக்குமா? என்பதை இப்போது கூற முடியாது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan #ADMK
    நாகர்கோவில்:

     நாகர்கோவிலில் இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற முறையில் அவர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

    இது பற்றி பேசும் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் கர்நாடகாவில் உள்ள அக்கட்சிகளின் கிளைகளை கலைத்து விடுவார்களா? தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இதனை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். பாரதிய ஜனதா கட்சிக்கும் இது பொருந்தும்.

    தமிழகத்தில் இப்போது உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு கழக ஆட்சியே காரணம். முல்லை பெரியாறு, காவிரி பிரச்சனைகளில் கடந்த 50 ஆண்டுகளில் தி.மு.க. - காங்கிரஸ் செய்த துரோகத்தை மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

    கடந்த 1999-ம் ஆண்டில் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அப்போது தி.மு.க.வுக்கு பாரதிய ஜனதா தேவைப்பட்டது. ஆனால் இப்போது பாரதிய ஜனதாவை தமிழகத்தை விட்டு விரட்டி அடிப்போம் என்று தி.மு.க. தலைவர் கூறுகிறார்.


    அவரது எண்ணம் ஒருபோதும் நடக்காது. தமிழகத்தில் இருந்து யார் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பது தேர்தலுக்கு பிறகு தெரியவரும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 30 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.

    தமிழகத்தில் அந்த அளவுக்கு பாரதிய ஜனதாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம். யாருடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமையுமா? என்பது அப்போது தெரியவரும். இப்போதே அது பற்றி கூறமுடியாது.

    தமிழகத்தில் விளை நிலங்களில் உயர் கோபுரம் அமைப்பது தொடர்பாக அந்த துறை மந்திரியுடன் பேசியுள்ளேன்.

    தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது சர்வதேச தொழில் முனைவோர் கூட்டம் நடத்தப்பட்டது. இப்போது மீண்டும் அது போன்ற கூட்டம் நடக்க இருப்பதை வரவேற்கிறோம்.

    புதிய தொழில்கள் கொண்டு வரும்முன்பு, ஏற்கனவே இங்கிருக்கும் தொழிற்சாலைகளை தக்க வைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

    கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரஜினி வராதது பற்றி நான் எதுவும் கூறமுடியாது. ஒப்பாரி வைக்கும் இடத்தில் அரசியல் செய்யக்கூடாது.

    தமிழகத்தை சுனாமி தாக்கியபோது யார்-யார்? இங்கு வந்தார்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனா தேவ், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் முத்துராமன், மாவட்ட பார்வையாளர் தேவ், முன்னாள் நகர தலைவர் ராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.  #BJP #PonRadhakrishnan #ADMK
    Next Story
    ×