search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம்-திருக்கோவிலூர் இடையே ஓடும் ரெயிலில் பெண் கொலை: கைதான வாலிபர் வாக்குமூலம்
    X

    விழுப்புரம்-திருக்கோவிலூர் இடையே ஓடும் ரெயிலில் பெண் கொலை: கைதான வாலிபர் வாக்குமூலம்

    விழுப்புரம்-திருக்கோவிலூர் இடையே ஓடும் ரெயிலில் ½ பவுன் நகைக்காக பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 70). இவர் கடந்த 9-ந் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற தீபவிழாவை பார்க்க மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருவண்ணாமலை சென்றார்.

    இவர் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையம் சென்றடைந்தது. அப்போது அதில் பயணம் செய்த ராஜேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரியின் மகள் ரம்யா விழுப்புரம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்-திருக்கோவிலூர் இடையே ஓடும் ரெயிலில் யாரோ மர்ம மனிதர் அவரை கழுத்தை அறுத்து கொன்று விட்டு அவர் அணிந்திருந்த நகை மற்றும் 2 செல்போன்களையும் எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கொலையாளியை பிடிக்க ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் டி.ஐ.ஜி. செந்தில்குமாரி, போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார்தாகூர் ஆகியோர் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருச்சி சுப்பிரமணியன், மதுரை மன்னர்மன்னன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் ‘சைபர்கிரைம்’ போலீசாரின் உதவியுடன் ராஜேஸ்வரியின் செல்போன் இருக்கும் இடம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவண்ணாமலையில் அது இருப்பது கண்டறியப்பட்டது.

    இதன் பின்னர் தனிப்படை போலீசார் திருவண்ணாமலை சென்றனர். அங்கு தேனிமலை பகுதியில் நின்ற ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தார்.

    அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். இதனால் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணையை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலை பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஆனந்தன் (37) என்பது தெரிந்தது. மேலும் ராஜேஸ்வரியை கழுத்தை அறுத்து கொன்றதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவர் போலீசில் ஆனந்தன் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    நான் கூலித்தொழிலாளி. தினமும் திருவண்ணா மலையில் இருந்து விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயிலில் சென்று வேலை செய்து வந்தேன். சம்பவத்தன்று வேலை முடிந்து விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றேன். அப்போது நான் இருந்த பெட்டியில் மூதாட்டி ராஜேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அவர் மூக்குத்தி அணிந்திருந்தார். அதை பறிக்க திட்டமிட்டேன். பின்னர் நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஸ்வரியிடம் சென்று மூக்குத்தியை கழற்றி கொடு. இல்லையென்றால் குத்தி கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். ஆனால் அவர் மூக்குத்தியை கழற்றி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கழுத்தை அறுத்து கொன்றேன்.

    பின்னர் அவர் அணிந்திருந்த ½ பவுன் மூக்குத்தியை பறித்தேன். மேலும் அவர் வைத்திருந்த 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். ஆனால், போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து ஆனந்தனை போலீசார் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆனந்தன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×