search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய நிலம் அபகரிப்பு: போராட்டத்திற்கு பாமக ஆதரவு- ராமதாஸ் அறிக்கை
    X

    விவசாய நிலம் அபகரிப்பு: போராட்டத்திற்கு பாமக ஆதரவு- ராமதாஸ் அறிக்கை

    விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் வேளாண் விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, அவர்களின் நிலங்களை அளவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளை வாழ வைக்க வேண்டிய அரசு, காவல்துறை மூலமாக விளைநிலங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த நிலங்களை எதற்காகவும் விவசாயிகள் பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்களை அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் 13 மாவட்ட விவசாயிகளும் ஒன்று சேர்ந்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் என்ற அமைப்பை உருவாக்கி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின் காரணமாக மின் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.



    பவர் கிரிட் நிறுவனம் கோவை மாவட்டத்தில் காவல்துறை உதவியுடன் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, நிலங்களை அளந்து பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது சட்டவிரோதமாகும். இதை கண்டித்து கோவை சுல்தான்பேட்டையில் விவசாயிகள் தொடர் உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பா.ம.க. முழுமையான ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாய விளைநிலங்கள் வழியே மின் கோபுரங்களை அமைக்கும் மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நில அளவீடு பணிகளை தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகள் போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Ramadoss
    Next Story
    ×