search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் செய்த கிராம மக்களை படத்தில் காணலாம்.
    X
    அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் செய்த கிராம மக்களை படத்தில் காணலாம்.

    புயல் தாக்கி 13 நாட்களாகியும் மின் இணைப்பு வழங்காததால் அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்

    கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு 13 நாட்களாகியும் மின் இணைப்பு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    வடமதுரை:

    தமிழகத்தை புரட்டிபோட்ட கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடை க்கானல், வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம் பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    வடமதுரை அருகில் உள்ள சுக்காம்பட்டி, குரும்பபட்டியில் கஜாபுயல் தாக்குதலின்போது ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்துவிழுந்தன. அவை 10 நாட்களுக்கு பிறகு அப்புறப் படுத்தப்பட்டு மின்வினியோகம் வழங்கப்பட்டது.

    ஆனால் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் இன்னும் மின்வினியோகம் தரப்படவில்லை என குற்றம்சாட்டி இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து பூசாரிபட்டி நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் மின்வினியோகம் கொடுத்து வருகின்றனர். புயல் பாதித்து 13 நாட்களாகியும் இன்னும் இருளில் தவித்து வருகிறோம். எனவே அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையில் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

    சம்பவ இடத்திற்கு வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மின்வாரிய அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு 2 நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்வினியோகம் தரப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

    அதிகாலையில் பஸ்மறியல் போராட்டம் நடைபெற்றதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். #GajaCyclone
    Next Story
    ×