search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனை சந்தித்ததில் அரசியல் இல்லை - திருமாவளவன்
    X

    தினகரனை சந்தித்ததில் அரசியல் இல்லை - திருமாவளவன்

    டிடிவி தினகரனை சந்தித்ததில் அரசியல் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #TTVDhinakaran
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை நுங்கம்பாக்கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ் ஈழ விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர் நினைவுநாள். இன்றைய தினம் தமிழ் சொந்தங்களும், சர்வதேச மக்களும் நினைவு கூர்கிற மகத்தான நாள்.

    7 பேர் விடுதலைக்காக டிசம்பர் 3-ந்தேதி கவர்னர் மாளிகை முன்பு ம.தி.மு.க. நடத்தும் முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும்.

    தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தோழமை கட்சிதான். தி.மு.க.வுடன் கூட்டணியாக வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். இதில் முடிவெடுக்கும் இடத்தில் தி.மு.க. உள்ளது.



    கூட்டணியில் இருப்பதாக நான் சொல்ல முடியாது. அதை தி.மு.க.தான் அறிவிக்கும். எனவே தி.மு.க. கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. நாங்கள் யாரையும் சந்திக்கலாம். ஆனால் தேர்தல் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் உறுதியாக இருக்கிறது.

    நான் சில மாதங்களில் 2, 3 முறை முதல்-அமைச்சரை சந்தித்து இருக்கிறேன். அதேபோல் டி.டி.வி. தினகரனை நேற்று கொத்தமங்கலம் என்ற இடத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றபோது எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. இந்த சந்திப்புகள் மக்களுக்கான களத்தில் நிகழக்கூடியவை. ஆனால் தேர்தல் களத்தில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது.

    தி.மு.க. காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆகிய தோழமை கட்சிகளின் உறவு இணக்கமாக இருக்கிறது. இதில் எந்த பங்கமும் ஏற்படவில்லை. எனவே தி.மு.க. பொருளாளர் துரை முருகன் சொன்ன கருத்து மிக எதார்த்தமானது. இன்னும் சொல்லப்போனால் நான் முன்மொழிந்ததை அவர் வழி மொழிந்திருக்கிறார்.

    அவருக்கு முன்னதாகவே நான் சொல்லி இருக்கிறேன். தி.மு.க.வோடு நாங்கள் தோழமை கட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்சிகள் கூட்டணியாக மாற வேண்டும். இதை அதிகாரப்பூர்வமாக தி.மு.க. தலைமை அறிவிக்க வேண்டும் என்று ஒருமுறைக்கு பலமுறை சொல்லி இருக்கிறேன். எனவே இதில் எந்த குழப்பமும் இல்லை. இந்த அணி கூட்டணியாக வலுப்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் திருமாவளவன் அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Thirumavalavan #TTVDhinakaran
    Next Story
    ×