search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் பாதிப்பை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது ஏன்?- ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்
    X

    கஜா புயல் பாதிப்பை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது ஏன்?- ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்

    கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது கண்துடைப்பு பயணம் என விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #MKStalin
    சென்னை:

    கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது, கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி எடுத்து கூறினார். சேதங்களை விரிவாக பட்டியலிட்டு 40 பக்கம் கொண்ட மனுவையும் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


    பிரதமர் மோடியை சந்தித்த பின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் கஜா புயலினால் கடும் சேதம் அடைந்துள்ளது. அதற்குத் தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக 1500 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டுமென்று பாரதப் பிரதமரிடத்திலே வலியுறுத்தி உள்ளேன். நிரந்தர சீரமைப்புக்காக 15000 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் பிரதமரிடத்திலே கேட்டுக் கொண்டுள்ளேன்.

    கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக மத்தியக் குழு பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கிட்டு நிவாரணத்தை அளிக்க வேண்டுமென்று பாரதப் பிரதமரிடத்தில் கேட்டுக் கொண்டுள்ளேன். பிரதமர் உடனடியாக மத்தியக் குழுவை அனுப்பி வைத்து, விரைவில் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட அனுப்பிவைப்பதாக கூறி உள்ளார்.

    எங்களைப் பொறுத்த வரைக்கும் தமிழகத்தில் கஜா புயல் வருவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாங்கள் எடுத்தோம். கிட்டத்தட்ட 82,000 நபர்களை முகாம்களில் தங்கவைத்து பாதுகாத்ததன் விளைவாக, கஜா புயலின்போது பொது மக்களுடைய பாதிப்பு குறைக்கப்பட்டிருக்கின்றன.

    கஜா புயலினால் பாதிக்கப்பட்டவுடனேயே அதிகாரிகளை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்து சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு அதை தற்போது பிரதமரிடத்தில் அளித்துள்ளேன். தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறது. அதற்காகத்தான், முதற்கட்டமாக தமிழ்நாடு அரசால் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகளெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

    இதுவரை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 12, இந்த கஜா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63, சேதம் அடைந்த குடிசை வீடுகள் 2,78, 824, ஓட்டு வீடுகள் 62,996, மொத்தம் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் 3,41,820. கால்நடைகள் உயிரிழப்பைப் பொறுத்த வரைக்கும் ஆடு, மாடுகள் 12,298, பறவைகள் 92,507, மொத்தம் 1,04,805. சாலை ஓரங்கள் மற்றும் வீடு ஓரமாக இருந்த சேதமடைந்த மரங்கள் 11,32,686, இதுவரை அகற்றப்பட்ட மரங்கள் 7,27,399. மீட்பு முகாம்களின் எண்ணிக்கை தற்போது 556 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 3,78,019. இதுவரை கணக்கிட்டுப்படி சாய்ந்த, ஒடிந்த மின்கம்பங்கள் 1,03,508, இதில் 40 சதவீதம் சீரமைக்கப்பட்டுவிட்டன. 886 மின்மாற்றிகள் வீழ்ந்து சேதமடைந்துள்ளன, இதில் 40 சதவீதம் தற்போது சீரமைக்கப்பட்டுவிட்டன.

    பழுதடைந்த துணை மின்நிலையங்கள் 181, இதுவரை 147 துணை மின் நிலையங்கள் சீரமைப்பட்டுள்ளன. துண்டிக்கப்பட்ட மின்இணைப்புகள் 53,21,506, இதுவரை, இதில் 40,04,452 சீரமைக்கப்பட்டுள்ளன. சீரமைக்கின்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மின்துறை பணியாளர்கள் 22163. குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட 184 நகராட்சி பகுதிகள் சீரமைக்கப்பட்டு விட்டன.

    உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டு நான் நேரில் சென்று பல குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறேன். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் வழங்குவதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சாதாரண காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும், உயிரிழந்த 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தலா 30,000 ரூபாய், காளை மாடுகளுக்கு தலா 25,000 ரூபாய், ஆடுகளுக்கு தலா 3,000 ரூபாய், முழுவதும் சேதமடைந்த குடிசை ஒன்றிற்கு 10,000 ரூபாய், பகுதி சேதடைந்த குடிசை ஒன்றிற்கு 4,100 ரூபாய், முழுவதும் சேதம் அடைந்த குடிசைகள், வீடுகளுக்கு பதிலாக, தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதிதாக வீடு கட்ட உரிய நிதியை அரசு வழங்கும்.

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, 1 வேட்டி, 1 சேலை மற்றும் 1 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு கூடுதலாக 1 வேட்டி, 1 சேலை, கூடுதலாக 4 லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கப்படும்.

    முகாமில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு உடனடியாக வாழ்வாதார நிவாரணமாக குடும்பம் ஒன்றிற்கு தலா 5000 ரூபாயும், துணிமணிகள், பாத்திரம், பண்டங்கள் ஆகியவை வாங்க குடும்பத்திற்கு தலா 3,800 ரூபாயும் வழங்கப்படுகிறது. முகாமில் தங்கியுள்ள பெரியோர்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் பால் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை கிராமப் புறங்களிலுள்ள குடும்பங்களுக்கு 2018 டிசம்பர் மாதத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை முன்னதாகவே சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 175 தென்னை மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1,92,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும், தென்னை மறுசாகுபடி செய்வதற்கு 1 ஹெக்டேருக்கு 72,100 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலமாக நிவாரணம் மற்றும் மறுசாகுபடி தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 2,64,600 ரூபாய் பெறுவர்.

    கேள்வி:- பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட நீங்கள் ஏன் சாலை மார்க்கமாக செல்லவில்லை?


    பதில்:- சாலை மார்க்கமாக சென்ற ஸ்டாலின் எத்தனை இடங்களைப் பார்வையிட்டார்? இன்றைக்கு நான்கு மாவட்டம் முழுவதும் பாதிப்பு அடைந்திருக்கிறது. அதை எப்படி நடந்து போய் பார்ப்பீர்கள்.

    நான் வந்து ஹெலிகாப்டர் மூலம் செல்கின்ற போது எல்லா புகைப்படத்தையும் எடுத்து வைத்திருக்கின்றேன். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன மரங்கள் சாய்ந்திருக்கிறது. எவ்வளவு வாழை மரங்கள் சாய்ந்திருக்கிறது. எவ்வளவு தென்னை மரங்கள் சாய்ந்திருக்கிறது. தாழ்வாக பறந்து எல்லாவற்றையும் பார்வையிட்டோம்.

    வெறுமென பார்வையிட செல்லவில்லை. முழு சேதம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே என்ன பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான், நேரடியாக சென்றோம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான புகைப்படங்களை பிரதமரிடத்தில் அளித்திருக்கிறேன். இது எல்லாம் நாங்கள் போய் எடுத்த படங்கள். அவர் எந்தெந்த இடத்திற்கு போனார். மூன்று இடங்களுக்கு போய் பாதியிலே திரும்பி வந்துவிட்டார். வெறுமென இரண்டு மூன்று இடங்களுக்கு சென்று பார்வையிட்டு வந்தால், நிவாரணம் வழங்க முடியாது. உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியாது.

    ஆகவே, இது தவறான செய்தி. நான் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். ஒரே தொகுதியில் இருந்து வந்திருக்கிறேன். மாறி மாறி நிற்கவில்லை. ஆகவே, மக்களுடைய உணர்வுகளை நன்கு உணர்ந்தவன். நன்றாக உணர்ந்த காரணத்தினால் தான், இதுவரை எந்த ஒரு அரசாங்கமும் செய்ய முடியாததை, புயல் வருவதற்கு முன்கூட்டியே மக்களை முகாம்களில் தங்க வைத்து பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் யாரும் இதுபோல் செய்யவில்லை.

    இன்றைக்கு லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதையெல்லாம் நாங்கள் அப்புறப்படுத்தி கொண்டு இருக்கின்றோம். கடந்த காலத்தில் எல்லாம் புயலால் இவ்வளவு சேதம் அடைந்தது கிடையாது. ஆனால் எதிர்கட்சிகள் எல்லாம் சாலைகளில் போகிறார்கள், பார்க்கிறார்கள், வந்து விடுகிறார்கள். அவர்களது வேலை அதோடு முடிந்து விட்டது.

    ஆனால் அரசாங்கம் அப்படியல்ல. எல்லா பகுதி மக்களுக்கும் தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். உணவு கொடுக்க வேண்டும், தண்ணீர் கொடுக்க வேண்டும், மருத்துவ வசதி கொடுக்க வேண்டும், சாலைகளில் உள்ள மரங்கள் அகற்றப்பட வேண்டும், அதற்கு தக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் கணக்கிட்டால் தான் எத்தனை பணியாளர்களை அனுப்பி வைக்க முடியும் என்பது தெரியும்.

    சேதம் அளவை கணக்கிட்டால் தான் எத்தனை பணியாளர்களை அனுப்ப வேண்டும் என்பது தெரியும். இந்த இரண்டு நாட்கள் கணக்கிடும் போது தான், மின்கம்பங்கள் சாய்ந்தது முதலில் 50 ஆயிரம் என்று சொன்னார்கள், பின்னர் 80 ஆயிரம் என்று சொன்னார்கள், இப்போது 1 லட்சத்து 3 ஆயிரம் ஆகி விட்டது. அதற்கு தக்கவாறு ஆங்காங்கே இருக்கின்ற நம்முடைய மின்சார ஊழியர்களையும் எல்லாம் அனுப்பி வைத்தோம். அதுமட்டுமல்லாமல், பக்கத்து மாநிலத்திலிருந்து மின் ஊழியர்களை வரவழைத்து, அந்தப் பணிகளில் ஈடுபடுத்தினோம்.

    இரவு பகல் பாராமல், மழையை கூட பொருட்படுத்தாமல் நம்முடைய மின்சார ஊழியர்கள் அந்த மின்கம்பங்களை நட்டு அதற்கு மின் இணைப்பு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

    அந்த ஊழியர்களின் சிரமத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆகவே, அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மின்சார ஊழியர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து இந்தப் பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கொச்சைப்படுத்த வேண்டாம்.

    கேள்வி :- புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நமக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது?

    பதில்:- நாங்கள் 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருக்கிறோம். மத்திய அரசிடமிருந்து நிரந்தர சீரமைப்பிற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருக்கிறோம். முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. முதல் கட்டமாக தற்காலிக பணி சீரமைப்புக்கு பிரதமரிடம் 1500 கோடி ரூபாயை கேட்டு இருக்கின்றோம். அவர்களும் வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு மத்திய குழுவையும் விரைந்து அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளுக்கும் கோட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ளவர்களையும் அனுப்பி வைத்திருக்கிறோம். வேகமாக துரிதமாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு இயல்பு நிலை திரும்புவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாவின் அரசு எடுத்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். #GajaCyclone #EdappadiPalaniswami #MKStalin 
    Next Story
    ×