search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிருபர்களுக்கு வைகோ பேட்டி அளித்த போது எடுத்த படம்.
    X
    நிருபர்களுக்கு வைகோ பேட்டி அளித்த போது எடுத்த படம்.

    மோடிக்கு எதிரான அலை வீசுகிறது- வைகோ

    இந்தியா முழுக்க மோடிக்கு எதிராக அலைகள் வீசி வருகிறது என்பதுதான் உண்மை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #Modi
    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரில் திருமண விழாவிற்கு வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிரூபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய அரசியலில் ஒரு மிக முக்கியமான கால கட்டத்தை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். பல்வேறு மொழிகள், தேசிய இனங்கள், கலாச்சாரங்கள் கொண்டிருக்கக்கூடிய இந்திய நாட்டில் ஒரே கட்சியின் ஆட்சி ஒரே மொழி, ஒரே மதம் என்கிற ஜனநாயகத்தை அழிக்கின்ற முயற்சியில் நரேந்திர மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்துத்துவா சக்திகள் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இயங்கி கொண்டிருக்கிறது.

    சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை உருவாகியிருக்கிறது. மீண்டும் ராமர் கோவில் பிரச்சனையை ஏற்படுத்தி பெரும் மோதலை உருவாக்கி, உத்தரபிரதேச தேர்தலில் தோல்வியை இடைப்பட்ட காலத்திலே சந்தித்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொகுதியிலேயே தோல்வி, துணை முதலமைச்சர் தொகுதியில் தோல்வி என்று அந்த கட்சி தோல்வியை சந்தித்தது. நபர் ஒருவருக்கு 15 லட்ச ரூபாய் கொடுப்பதாக பொய்யான தேர்தல் வாக்குறுதியை கூறி அன்றைக்கு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி தந்தாரோ அதே போல இப்போதும் இந்தத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற மோடி நினைக்கிறார் அது நடக்காது.

    கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும், 2 பாராளுமன்ற தொகுதியிலும் பாரதிய ஜனதா தோற்றது. எடியூரப்பா கடந்த தேர்தலில் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இப்போது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரது மகன் வெற்றி பெற்றுள்ளார்.


    எனவே இந்தியா முழுக்க மோடிக்கு எதிராக அலைகள் வீசி வருகிறது என்பதுதான் உண்மை. நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மட்டுமல்ல பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என சந்திரபாபு நாயுடு, சரத்பவார் ஆகியோர் முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று நாங்கள் விரும்புகின்றோம்.

    தமிழகத்தில் கட்டுக்கடங்காத ஊழல் மிகப்பெரிய அளவில் இருக்கிறது, அனைத்து துறைகளிலும் ஊழல், அமைச்சர் மீது குற்றச்சாட்டு, சிபிஐ விசாரணை, முதலமைச்சரே குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார் என்பது தமிழ்நாட்டில் நிர்வாகம் சீர்குலைந்து இருக்கிறது என்பதற்கு உதாரணமாகும்.

    மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்ரமசிங், மகேந்திர ராஜபக்சே ஆகியோர் படுகொலைகாரர்கள். சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். மகேந்திர ராஜபக்சே மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடிய சூழல் என்பது கவலை அளித்துள்ளது.

    தமிழகத்தின் உரிமைகளை அளிக்கக்கூடிய இந்த நேரத்தில் வரக்கூடிய பாராளுமன்றத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான வெறுப்புணர்வு, மத்திய அரசுக்கு எதிரான கோப உணர்ச்சி வேகமாக ஏற்பட்டு வருகிறது.

    டீசல் விலையில் அஞ்சு பைசா, பத்து பைசா என குறைத்து மக்களை ஏமாற்ற முடியாது. இது ஒட்டகத்தின் மேலே உள்ள பாரத்தை நீக்குவது போல ஆகும். ஒரு துரும்பை தூக்கி கண்ணுக்கு முன் காட்டி கீழே போடுவது போல நரேந்திர மோடி ஈடுபட்டு வருகிறார். ரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 10-ந் தேதி ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது அனைத்து துறைகளிலும் ஆக்டோபஸ் கரங்களை போல வளைத்து தன் கைகளில் வைத்து ஆட்டி படைக்க நினைக்கும் நரேந்திர மோடி அரசு முயற்சிக்கிறது என்பதற்கு சரியான உதாரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MDMK #Vaiko #Modi
    Next Story
    ×