search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்றி காய்ச்சலை குணப்படுத்த 19 லட்சம் மாத்திரைகள், 2 லட்சம் தடுப்பூசி தயார்- ஜெ.ராதாகிருஷ்ணன்
    X

    பன்றி காய்ச்சலை குணப்படுத்த 19 லட்சம் மாத்திரைகள், 2 லட்சம் தடுப்பூசி தயார்- ஜெ.ராதாகிருஷ்ணன்

    பன்றி காய்ச்சலை குணப்படுத்த 19 லட்சம் ‘டேமிபுளூ’ மாத்திரைகளும் 2 லட்சம் தடுப்பூசிகளும் தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #Swineflu #TamilNadu #JRadhakrishnan
    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் ஒரே நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    தமிழக சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுகாதாரத்துறை அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அடிப்படை சுகாதார பணிகளில் தோய்வு ஏற்பட்டு குப்பைகள் வீதிகளில் முறையாக அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதும், பொது சுகாதாரத்திற்கு சவால் விடும் நிலையாக உள்ளது.

    சாலையோரமும், தெரு ஓரமும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோயை பரப்பும் நிலையும் காணப்படுவதால் சுகாதாரத்துறையின் நடவடிக்கை முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் எட்டவில்லை.

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தற்போது இயங்கி வருவதால் பருவ காலத்தில் ஏற்படும் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த திணறி வருகிறார்கள்.

    தமிழக சுகாதாரத்துறையின் நடவடிக்கைக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்காததால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    நல்ல தண்ணீரில் இருந்து தான் டெங்குவை ஏற்படுத்தும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அரசு நிறுவனங்கள், தனியார், நிறுவனங்கள், பொதுமக்கள் குடி தண்ணீரை சேகரித்து வைக்கும் போது அதனை மூடி வைக்க வேண்டும். மொட்டை மாடி மற்றும், காலி மனைகளில் தேங்கும் மழைநீரில் இருந்து டெங்கு கொசு உருவாகிறது.

    அதுபோல கட்டுமான பணி இடங்களில் சேகரித்து வைக்கப்படும் தண்ணீரில் இருந்தும் கொசுக்கள் உருவாகின்றன. நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுக்களை அழிக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகின்றன.

    திருமண மண்டபம், ஓட்டல், மருந்துக்கடை உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள சங்கத்தினர், பள்ளி, கல்லூரிகளின் நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து டெங்கு கொசுக்களை அழிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குப்பைகழிவுகள் தேங்கி இருப்பதை அகற்றி அங்கு பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு ஆகியவற்றை தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    டெங்கு காய்ச்சலால் கடந்த ஆண்டு 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் 2500 பேர் இதுவரையில் டெங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் நாள் ஒன்றுக்கு 30 பேரில் இருந்து 50 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

    பன்றி காய்ச்சல் தினமும் 5 பேர் முதல் 20 பேருக்கு உறுதி செய்யப்படுகிறது. பன்றி காய்ச்சலை பொறுத்த வரையில் பொதுமக்கள் தங்கள் கைகளை கழுவினாலே இந்நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பொது இடங்களுக்கு சென்று வந்த பிறகு சுத்தமாக கை கழுவினால் அந்த வைரஸ் தொற்று ஏற்படாது,

    பன்றி காய்ச்சலை குணப்படுத்த 19 லட்சம் ‘டேமிபுளூ’ மாத்திரைகள் தயாராக இருக்கின்றன. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவர்கள் கூட தேவைப்பட்டால் அந்தந்த மாவட்ட துணை இயக்குனரை அணுகி மாத்திரைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.



    பன்றி காய்ச்சலுக்கு புதிய வகையான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியா ளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 50 ஆயிரம் தடுப்பூசி தற்போது கையிருப்பு உள்ளது, மேலும் 1½ லட்சம் தடுப்பூசி விரைவில் வர இருக்கிறது.

    இதுதவிர 11 ஆயிரம் பாதுகாப்பு கவச உடைகள் உள்ளன. மேலும் 33 ஆயிரம் கவச உடைகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு முகமுடி 3½ லட்சம் இருப்பு உள்ளன.

    மேலும் திருமண மண்டபங்கள், ஷாப்பிங் மால் போன்ற மக்கள் கூடும் இடங்களில் 5 சதவீதம் ‘‘லைசால்’’ பயன்படுத்தி அந்த பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கி உள்ளோம். அனைத்து மதத்தினரும் கோவில் திருவிழா மற்றும் பொது இடங்களுக்கு சென்று வரும்போது கண்டிப்பாக கைகழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இருமல், தும்மல் வந்தால் மூக்கை கைக்குட்டையால் மூடிக் கொள்ள வேண்டும்.

    டெங்கு காய்ச்சலை பொறுத்த வரையில் 1100 செல் கவுண்டர்கள் ரத்த அணுக்களை கண்டுபிடிக்க அரசு மருத்துவமனைகளில் உள்ளது. ஒரு நிமிடத்தில் எவ்வளவு ரத்த அணுக்கள் உடலில் உள்ளது என்பதை கண்டுபிடித்து விடலாம். இதுதவிர டெங்குவை கண்டுபிடிக்கும் ‘‘எலிசா’’ சோதனை மையம் 125 இடங்களில் உள்ளன. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 48 மணிநேரத்திற்குள் அரசு மருத்துவமனைக்கு வந்தால் எவ்வித உயிர் இழப்பும் ஏற்படாது. தனியாக மருந்துகள் வாங்கி சாப்பிடக்கூடாது. டாக்டரை அணுக வேண்டும்.

    பருவகாலத்தில் ஏற்படக் கூடிய காய்ச்சல் 98 சதவீதம் முழுமையாக குணமடையக் கூடியதாக இருந்த போதிலும் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து கவனக் குறைவாக இருப்பதாலும் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு வராததாலும் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

    இதுவரையில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 5 பேரும் உயிர் இழந்துள்ளனர்.பரிசோதனை உறுதி செய்யப்படாதநிலையில் 5 பேர் உயிர் இழந்தனர்.

    மருத்துவமனைக்கு காலம் கடந்து வருவது மற்றும் வேறு நோய்கள் பாதிக்கப்பட்டோருக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் தாக்கமும் இருந்து உயிர் இழப்பும் ஏற்படுவதை கண்டுபிடிக்க தணிக்கை குழு ஒன்று போடப்பட்டுள்ளது.

    ஆதலால் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுகினால் எவ்வித பயமும் கொள்ளத்தேவையில்லை. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்க பொதுநல அமைப்புகள், அனைத்து சங்ககங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Swineflu #TamilNadu #JRadhakrishnan
    Next Story
    ×