search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசனுக்காக தி.மு.க. உறவை காங்கிரஸ் முறிக்காது - சஞ்சய்தத் பேட்டி
    X

    கமல்ஹாசனுக்காக தி.மு.க. உறவை காங்கிரஸ் முறிக்காது - சஞ்சய்தத் பேட்டி

    கமல்ஹாசனுக்காக தி.மு.க. உறவை காங்கிரஸ் முறிக்காது என்று டெல்லி பிரதிநிதி சஞ்சய்தத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Kamalhaasan #DMK #Congress #sanjayDutt

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் நான் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். 50 வருடமாக ஆட்சியில் இல்லாமல் இருந்தும் காங்கிரசுக்கு பலமான அடித்தளம் இருக்கிறது. மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

    மத்தியில் ஆளும் மோடி மீதும், தமிழகத்தில் ஆளும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.-க்கு எதிராகவும் அலை வீசுகிறது.

    தேர்தல் நேரத்தில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை தருவேன். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் தருவேன். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கட்டுப்படுத்தப்படும் என்று மோடி அறிவித்தார்.

    ஆனால் இவற்றில் எதை யாவது மோடி நிறைவேற்றினாரா? மத்திய பா.ஜனதா ஆட்சியில் 100 சதவீத ஊழல் நடக்கிறது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கு ரூ.15 லட்சம் கொடுப்பேன் என்று சொல்லி விட்டு மக்கள் பணத்தை பல்வேறு வரிகள் மூலம் பிடுங்குகிறார்கள்.

    மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் பாலியல் புகாரில் சிக்கினார். மோடி எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார். மக்கள் கிளர்ந்து எழுந்ததால் அக்பர் பதவி விலகினார். உத்தரபிரதேசத்தில் பா. ஜனதா மந்திரிகள் மீதே கற்பழிப்பு வழக்கு உள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    ரபேல் போர் விமானம் வாங்கியதால் நடந்த ஊழல் குறித்து ராகுல்காந்தி விளக்கம் கேட்டு சில மாதங்கள் ஆன பிறகும் மோடி பதில் சொல்லவில்லை. சின்னச்சின்ன வி‌ஷயங்களுக்கு எல்லாம் டுவிட்டரில் பதிவு செய்யும் மோடி ஏன் ராகுல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்?


     

    மத்தியில் நடைபெறும் ஊழல் அரசை போல் மாநிலத்திலும் ஊழல் அரசு நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறை டெண்டர் விவகாரத்தில் உறவினருக்கு விட்டுக் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    விசாரணை முடியும் வரை முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்கள் உள்ளன. இவற்றை கோர்ட்டு நேரடி கண்காணிப்பில் தனி விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

    தமிழகத்தை பொறுத்த வரை பா.ஜனதாவுக்கு அடித்தளம் இல்லை. எப்படியாவது நுழைய வேண்டும் என்பதற்காக மோடி அ.தி.மு.க. அரசை ஆட்டி வைக்கிறார். டெல்லியில் மோடி வாசிப்பதற்கு ஏற்ப தமிழ் நாட்டில் இவர்கள் ஆடுகிறார்கள்.

    ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களையும், மோடியின் நிர்பந்தத்தால் தற்போதைய அ.தி.மு.க. அரசு ஆதரித்துள்ளது. தி.மு.க. மூழ்கும் கப்பல் அதில் இணைபவர்களும் மூழ்குவார்கள் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை கூறி இருப்பது மிகப்பெரிய ஜோக். யார் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். யார் நீந்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    தேசிய அளவில் வகுப்பு வாத பா.ஜனதா அரசை வீழ்த்த மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

    பா.ஜனதாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். 2004 தேர்தலை விட மகத்தான அளவில் 39 தொகுதிகளையும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கைப்பற்றும்.

    மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைத்தும் எங்கள் கூட்டணியில் இணையலாம். கமல்ஹாசன் காங்கிரசுடன் சேர விருப்பம் தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க. அல்லாத காங்கிரஸ் என்பது முரண்பாடாக உள்ளது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. கமலுக்காக தி.மு.க.வுடன் உள்ள உறவை காங்கிரஸ் முறிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கோபண்ணா, அருள்பெத் தையா, சி.பி.செல்வம், அசன்சேக் ஆகியோர் உடன் இருந்தனர். #Kamalhaasan #DMK #Congress #sanjayDutt

    Next Story
    ×